கடந்த காலங்களில் ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டிய வருடாந்த இடமாற்றங்களை வழங்காது அண்மையில் வழங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் இடமாற்றங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதை இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் இனங்கண்டுள்ளது.

அத்துடன், பல ஆசிரியர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

குறித்த விடையம் தொடர்பில் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

இடமாற்றக் கடிதங்களில் ஆசிரிய தொழிற்சங்கங்களின் பெயர்களை குறிப்பிட்டு, அத்தொழிற் சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது இது தவறாகும். இடமாற்றம் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாத்திரமே தொழிற்சங்கங்கள் பரிசீலனை செய்து முடிவெடுத்தது. 

ஆனால் பதில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான ஆசிரியர்களின்  தெரிவில் எமக்கு எந்தச் சம்பந்தமுமில்லை. அவ்வாறான பெயர் பட்டியல்கள் வலயக் கல்விப்பணிப்பாளர்களால் வழங்கப்பட்டு, அதிலிருந்து மாகாணகல்வித் திணைக்களத்தால் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இருக்க ஏன் தொழிற்சங்கங்களின் பெயரும் இணைத்துக் கொள்ளப்பட்டது. 

அடுத்து பதில் ஆசிரியர் வழங்குவதில் சில நிபந்தனைகள் தொழிற் சங்கங்களால் முன்னைய மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் முன்வைக்கப்பட்டிருந்தன. வெளிவலயங்களில் கடமையாற்றாதவர்கள், வெளிவலயத்தில் குறைந்த காலம் சேவையாற்றியவர்கள், நிபந்தனைக் காலத்தினை பூர்த்தி செய்யாதவர்கள். இதில் கஷ்டப் பிரதேசப் பாடசாலையில் வேலை செய்யாதவர்களும் அடங்கும். இந்நிபந்தனைகளின் அடிப்படையிலே இடமாற்ற செயற்பாடுகள் மேற்கொள்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 

அவ்வாறு இருக்க நீண்ட காலம் கஷ்டப்பிரதேசங்களில் சேவை செய்த ஆசிரியர்களுக்கும், வெளிவலயங்களில் கடமையாற்றிய ஆசிரியர்களுக்கும் மீளவும் இடமாற்றம் வழங்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியதாகும். இடமாற்றக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. இவ்விடமாற்றத்திற்கான பொறுப்பை எம்மீது சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறான இடமாற்றங்களை மீள் பரீசீலனை செய்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை உடன் விடுவிக்க வேண்டும். 

மேலும் இடமாற்றக் கடிதங்களில் ஆசிரிய தொழிற்சங்கங்களின் பெயர்களை குறிப்பிடுவதைத் தவிர்த்து பொதுவாக இடமாற்றச்சபையின் தீர்மானத்திற்கு அமைய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடுவது சிறந்தது. என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ளது. 

இதைவிட கிழக்கு மாகாணத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோராமல் ஆளுநர் நியமனம் செய்துள்ளமை வருத்தத்திற்குரியது. எந்தவொரு வெற்றிடமும் விண்ணப்பம் கோரியே நிரப்பப்படவேண்டும். ஆனால் சிலருடைய அபிலாசைகளுக்காக விண்ணப்பம் கோராமல் நியமனம் செய்வது சட்டத்திற்கு முரணானது மட்டுமன்றி முறைகேடுகளுக்குத் துணைபோகும் செயற்பாடாகவே அமையும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதோடு, இவ்விடயம் தொடர்பில் அரச உயர்மட்டங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாக இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.