(இரோஷா வேலு) 

அனுராதபுரம் -  பண்டாரநாயக்க மாவத்தை ரயில் கடவைக்கருகில் சடலமொன்று காணப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அனுராதபுரம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரயிலுடன் மோதுண்டு குறித்த நபர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இதன்போது காத்தான்குடியைச் சேர்ந்த ஆதாம் லெப்பே என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் எனவும், சம்பவத்துக்கு தொடர்புடைய ரயில் எது என்பது குறித்தும் இதுவரையில் கண்டறியப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பகுதியில் உணவகமொன்றில் கடமையாற்றி வருபவர் என்றும், வெளியே சென்றவர்  கன நேரமாகியும் மீள வாராமையினால் குறித்த பகுதியில் தேடிய போதே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து இவரது சடலமானது மரண பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.