வருடா வருடம் தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு மற்றும் ஒளிவிழா நிகழ்வானது 'கிறிஸ்து பிறப்பும் நத்தாரின் சிறப்பும்' எனும் தொணிப்பொருளில்  இன்று(16) மதியம் மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

வடக்கில் அதிக கிறிஸ்தவ சமயத்தை சார்ந்த மக்களை கொண்ட மாவட்டங்களில் மன்னார் மாவட்டமும் ஒன்று. அந்த வகையில் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 2018 ஆண்டுக்கான தேசிய கிறிஸ்மஸ் விழா   மன்னாரில் இடம்பெற்றது. 

வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்துவ மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

 அவருடன் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பர்னாந்து ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , காதர் மஸ்தான் , வடமாகாண ஆளுனர் றெஜினோல் குரே மற்றும் சர்வமத தலைவர்கள் , அருட்சகோதரர்கள் , அருட் சகோதரிகள் , திணைக்கள தலைவர்கள் , பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் நத்தார் பாடல் நிகழ்வுகளும் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது .அதே போன்று கிறிஸ்மஸ் நிகழ்வு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.