இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து வெளியேறிய தாயகம் திரும்பிய பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூர் விமான நிலையத்தில் வைத்து ரசிகர்கள் மேசமான வரவேற்பளித்துள்ளார்.

இருபதுக்கு - 20  உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குழு -2 இல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பங்களாதேஷ்  அணிகள் இடம் பிடித்திருந்தன. 

இதில் இந்தியாவும், நியூசிலாந்தும், அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

சூப்பர்-10 லீக் ஆட்டங்களில், இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் தோற்ற பாகிஸ்தான், பங்களாதேஷ் அணியிடம் மாத்திரமே வெற்றி கண்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி, நேற்று தாயகம் திரும்பியது. அணி வீரர்கள் வரவேற்க, லாகூர், அல்லமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

வழக்கமாக வீரர்களை வாழ்த்தி வரவேற்கவே ரசிகர்கள் திரளுவார்கள்.  ஆனால், பாகிஸ்தான் வீரர்களை திட்டித் தீர்க்கவே ரசிகர்கள் குவிந்திருந்தனர். இதையறிந்த,  பொலிஸார் விமானநிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வீரர்கள் தமது லக்கேஜ்களுடன் வெளியே வந்தபோது, இருபுறமும் கூடியிருந்த ரசிகர்கள், அவர்களை பார்த்து, ஷேம்.. ஷேம்.. (அசிங்கம்) என கோஷமிட்டனர். 

இது வீரர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.