( வீ. தனபாலசிங்கம் )

பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ தனது கொழும்பு வாசஸ்தலத்தில் இருந்து நிகழ்த்திய உரையில்  கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் நிலவிய அரசியல் நெருக்கடியை தேர்தல்களை விரும்புகின்ற அரசியல் சக்திகளுக்கும் விரும்பாத சக்திகளுக்கும் இடையிலான பலப்பரீட்சையின் விளைவான ஒன்று என்று மக்களுக்கு காட்டுவதற்கு தன்னால் முடிந்த அளவுக்கு பிரயத்தனத்தை  மேற்கொண்டிருந்தார். .

அரசியலமைப்புக்கு விரோதமாக எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கருதியதாக உரையில் எந்த தடயமும் இல்லை.

அக்டோபர் 26 தாங்கள் அரசாங்கத்தை அமைத்த பிறகு பாராளுமன்றத்தை இடைநிறுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலைப் பற்றி எதுவும் கூறாத முன்னாள் ஜனாதிபதி நவம்பர் 9 ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய பொதுத் தேர்தலை ஜனவரி 5 நடத்துவதற்கு செய்த பிரகடனத்தை மாத்திரம் குறிப்பிட்டிருக்கிறார்.அத்துடன் பொதுத் தேர்தல் நடைபெறும் வரைக்கும் இரண்டரை மாதங்களுக்கு பதவியில் இருக்கும் நோக்குடனேயே தான் பிரதமர் பதவியை ஏற்று அரசாங்கத்தை அமைக்க முன்வந்ததாக கூறியிருக்கிறார். 

அவரைப் பொறுத்தவரை, இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற நெருக்கடி எந்தவிதமான தேர்தலையும் நடத்தாமல் நாட்டை ஆட்சி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவானதே என்று மக்களுக்கு காண்பிக்க முனைந்து நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டவராக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டுமென்று ஜனாதிபதியைக் கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்ளித்ததைச் சுட்டிக்காட்டியிருக்கும் ராஜபக்ச, ஐ.தே.க.வை ஆட்டிப்படைக்கக்கூடியதாக அந்த கட்சி பாராளுமன்றத்தில் ' றிமோற் கொன்றோலை ' இப்போது அதன் கையில் வைத்திருக்கிறது என்று கூறுகிறார். 

விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்ளித்திருந்தாலும் அரசாங்கத்தில் இணைந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் கூட்டமைப்பு அதன் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இணங்கிச்செயற்படாத பட்சத்தில் எந்த நேரத்திலும் ஐ.தே.க.வுக்கான ஆதரவை விலக்கிக்கொள்ளலாம் என்று கற்பிதம் செய்திருக்கும் ராஜபக்ச தமிழக் கட்சியுடன் சேர்ந்து விக்கிரமசிங்க அரசாங்கத்தை அமைக்கப்போகிறார் என்று இனவாதத் தொனியில் தென்னிலங்கை மக்களுக்கு செய்தியொன்றை விடுத்திருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக,  புதிய அரசியலமைப்பொன்றைக்  கொண்டுவரமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிட்டதை தங்களது கடந்த ஒனறரை மாதகால செயற்பாடுகளின் மகத்தான வெற்றியாக முன்னாள் ஜனாதிபதி பெருமைப்படுகிறார்.

அதாவது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்துவதற்கு ஐ.தே.க.வுக்கும் அதன் நேசக் கட்சிகளுக்கும் முன்னர்  இருந்த வாய்ப்பை இப்போது இல்லாமல் செய்துவிட்டதாக அவர் கூறுகிறார்.அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தைக் கொண்டுவந்து நாட்டை நிருவகிக்கமுடியாதாக  மாற்றிய அதே பேர்வழிகளினால் வரையப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பு வரைவு  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படக்கூடிய சாத்தியத்தை இல்லாமல் செய்துவிட்டதாக ராஜபக்ச மகிழ்ச்சியடைகிறார்.