பாதாள உலகைச் சேர்ந்த மூவருக்கு இராணுவ முகாமிலிருந்த துப்பாக்கிகள் மற்றும் ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் பெருந்தொகையிலான சன்னங்களை வழங்கிய இராணுவ கட்டளை அதிகாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் நீதிபதி அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சியாம்பலாண்டுவை நீதவான் நீதிபதி நிலந்த விமலரட்ண முன்னிலையில் இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியை சியாம்பலாண்டுவை பொலிஸார் ஆஜர் செய்திருந்தனர்.

அவ்வேளையில் நீதிபதி அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் தொம்பகாவெலயின் ஆடம்பர வீடொன்றினை சுற்றி வளைத்து தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். 

அவ்வேளையில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட மூவரைக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து அவர்களின் உடமைகளை சோதனையிட்ட பொலிஸார் ரி - 56  ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 2997 சன்னங்களையும்  3.8 மில்லி மீற்றர்களைக் கொண்ட ரிவோல்வர்களுக்கு பயன்படுத்தப்படும் 32 சன்னங்களையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது பெருந்தொகையான சன்னங்களை இராணுவ மேஜரான கட்டளை அதிகாரியிடம் தாம் பெற்றதாகக் கூறியதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவர் ஏற்கனவே சியம்பலாண்டுவை நீதவான் நீதிபதி நிலந்த விமலரட்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு எதிர்வரும் 26 ஆம் திகதி சியம்பலாண்டுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

குறித்த மூவரை தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது குறித்த மூவரும் நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகள் என்றும் இவர்கள் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சியம்பலாண்டுவைப் பொலிஸார் தொடர்ந்தும் தீவிர புலன்விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.