முல்லைத்தீவுப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கைகலப்பில் இளைஞர் ஒருவர்தலையில் படுகாயமடந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இளைஞரின் காதுக்கு மேற்பகுதியில் இரும்புக் கம்பி ஒன்றால் குத்தப்பட்டு, கம்பி மற்றக்காதுக்கு மேல் பகுதி வழியாக வெளியே வந்துள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் அவருக்கு நரம்பியல் மருத்துவர்கள் குழு சத்திரசிகிச்சையை முன்னெடுக்க ஆயத்தமாகி வருவதாகவும் அறியமுடிகிறது.

இந்தக் கைகலப்பு நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 புத்தளத்தைச் சேர்ந்த 25 வயதுடைய  இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்தார். “புத்தளத்திலிருந்து பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்வதற்காக இளைஞனும் சகாக்களுக்கும் வாகனத்தில் முல்லைத்தீவுக்கு வருகை தந்துள்ளனர்.

முல்லைத்தீவு நகருக்கு அண்மித்த இடமொன்றில் மர நிழலில் இளைப்பாறிய போது,இளைஞருக்கும் சகாக்களுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இதன்போது இளைஞர் மீது மற்றொருவர் இரும்புக் கம்பியால் தாக்கி தலையில் காயத்துடன், முல்லைத்தீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞனுக்கு அதிகளவு குருதிப் போக்கு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையின் பின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றமை குறிப்பித்தக்கது.