முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ளார்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று, அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த செந்தில் பாலாஜி, பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்கு வரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ரி. ரி. வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.கவிற்கு அணி மாறினார்.

இன்று அதிலிருந்து விலகிய அவர் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். இந்நிகழ்வின் போது தி.மு.க.வின் பொருளாளரான துரைமுருகன், மூத்த நிர்வாகிகளான டி. ஆர். பாலு, ராஜா உள்ளிட்ட பலர் இருந்தனர்.

முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவேண்டும் என்று அவர் தினகரனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இவரின் முடிவை ரி. ரி. வி. தினகரன் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அ.ம.மு.க.விலிருந்து விலகும் முடிவை இவர் எடுத்துள்ளார் என்று ஒரு தரப்பினரும், கரூரைச் சேர்ந்த போக்கு வரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கருடன் மோதல் உள்ளதால் மீண்டும் அ.தி.மு.க.விற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் அவர் தி.மு.க.விற்கு திரும்பிவிட்டதாக மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.