(இரோஷா வேலு) 

வரலாற்று சிறப்பு மிக்க இன்றைய தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியே என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கும் மேற்பட்டவர் இல்லை என்பதை உயர் நீதிமன்ற தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார். 

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்ட மனு தொடர்பான  தீர்ப்புக்கு ஆஜராகியிருந்த போதே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் அங்கு கூறுகையில், 

உயர் நீதிமன்றினால் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பானது ஜனநாயகத்துக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றியே. நீதிமன்றம் சுயாதீனமாக தான் செயற்படுகின்றது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. அவற்றுடன் சட்டத்தின் முன் அனைவரும் சமமே. 

ஜனாதிபதி சட்டத்தின் ஆட்சிக்கு மேம்பட்டவர் அல்ல என்பதையும் நீதிமன்றம் தீர்ப்பு இன்று உறுதிப்படுத்துகின்றது. மக்கள் எதிர்பார்த்த தீர்ப்பே கிடைக்கப்பெற்றுள்ளது. இனியாவது ஜனாதிபதி அரசியலமைப்புக்கும் சட்டத்தினையும் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.