(எம்.மனோசித்ரா)

எந்த வித நிபந்தனைகளுமின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவளித்தாக தெரிவித்த பாராளுமன்ற‍ உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஒருமித்த நாடு என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர்கள் எம்முடன் ஒன்றிணைந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தோடு மஹிந்தராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் அனைத்து முறைமைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் எமக்கே பெரும்பான்மை உள்ளது என்பது நிரூபிப்பதற்கு இதனைவிட வேறு வழிமுறைகள் எவையும் கிடையாது. 

ஒருபுறம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பிற்கும் மதிப்பளித்து நம்பிக்கை பிரேரணை நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். 

மறுபுறம் மஹிந்தராஜபக்ஷவும் இவற்றை ஏற்றுக்கொண்டு மரியாதையுடன் அவராக முன்வந்து பிரதமர் பதவியை துறக்க வேண்டுமெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.