இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜொனதன்  லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்

இங்கிலாந்தின் டேர்ஹாம் கிரிக்கெட் கழகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய ஜொனதன் லூயிஸே  இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்றுவி;ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்  அவரது  தலைமையின் கீழ் 2013 முதல் டேர்ஹாம் அணி முக்கிய வெற்றிகளை பெற்றுள்ளது.

நியுசிலாந்திற்கு இலங்கை அணி விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு அணிகளிற்கும் இடையிலான ஒரு நாள் போட்டித்தொடரில் புதிய துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார்

2019 உலக கிண்ணப்போட்டிகள் வரை ஜொனதன் இலங்கை அணியுடன் இணைந்திருப்பார்.

ஜொனாதன் லூயிஸ் அவரது திறமை மற்றும் அனுபவம் காரணமாக இலங்கை  அணியின் துடுப்பாட்டத்தினை ஸ்திரமிக்கதாக மாற்றுவதற்கு  அவசியமாகவுள்ள  உத்வேகத்தை வழங்குவார் என இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் தொடர்தோல்விகள் காரணமாக துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர கடும் அழுத்தங்களிற்கு உள்ளாகியிருந்த நிலையிலேயே அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2019 உலககிண்ணப்போட்டிகளிற்கு இன்னமும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் அணியின் துடுப்பாட்ட தரத்தை பலப்படுத்தும் நோக்கில் அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவே புதிய பயிற்றுவிப்பாளராக ஜொனதனை  நியமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன