ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எதிர்கொண்ட பிரேரணையில் 200 பேர் தெரேசா மேயுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து பெரும்பான்மையானோர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிந்து விட்டது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள 27 நாடுகளுடனான நிதி கொடுக்கல் வாங்கல், எதிர்கால பரிவர்த்தனை, விசா மற்றும் குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்துகொள்ள வேண்டிய எதிர்கால ஒப்பந்தங்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தயாரித்து வந்தார். 

இவரின் இந்த நடவடிக்கைகளை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முதன்மை அமைச்சர்களும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்து வந்தனர்.

இந் நிலையிலேயே தெரேசா மேயை பதவியிலிருந்து விலக்குவதற்கு திட்டமிட்டு, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் கன்சர்வேட்டிவ் கட்சியின் செயற்குழு தலைவர் கிரஹம் பிராடிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து தெரேசா மேவுக்கு எதிராக நேற்று இரவு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 

இதில் கலந்து கொண்டு வாக்களித்த 317 எம்.பி.க்களில் 200 பேர் தெரசா மேவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் தெரசா மே வெற்றி பெற்றார். 

எனினும் 117 எம்.பி.க்கள் அவருக்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில் அவரது ஆட்சிக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. தற்போதுள்ள சூழலில்  பிரேக்சிட் விவகாரம் தொடர்பில் மே அரசாங்கம் மேற்கொள்ளும் எந்த முடிவும் சிக்கலையே ஏற்படுத்தும் எனவும் அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.