(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

அரசாங்கதின்  பங்காளியாக இணையாது எதிர்க்கட்சியாக இருந்து ஆதரவு வழங்குவது என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.  

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக  நியமிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியால் இன்று புதன்கிழமை  பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

மேலும் இந்த முடிவின்போது எந்தவொரு முன் நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. நாட்டின் ஸ்திரத்தன்மையை யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். இருந்தபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சகல தரப்பினரிடமும் கலந்துரையாடியிருந்தோம்.

ஐக்கிய தேசிய முன்னணியிடமும் இது பற்றிக் கலந்துரையாடினோம். இன்று ரணில் விக்ரமசிங்கவின் உரையில் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதகாவும், பிரிக்கப்படாது பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் அரசியல் தீர்வொன்றை முன்வைப்போம் தெளிவாகக் கூறியிருந்தார் எனவும் கூட்டமைப்பினர் இதன்போது தெரிவித்தனர்.