(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொண்டு புதிய அரசாங்கத்தை முன்னுக்கு கொண்டு செல்வோம். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் குற்றச்சாட்டுக்களையும் ஏற்றுக்கொள்கின்றோம் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கையை தெரிவித்து கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

கடந்த ஒன்றரை மாதமாக நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை. இதனால் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். அபிவிருத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால் தொடர்ந்தும் நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கம் ஒன்றை நாங்கள் அமைப்போம். அதில் கடந்த காலத்தில் எங்களால் விடப்பட்ட தவறுகளை திருத்திக்கொண்டு முன்னுக்கு செல்வோம் என்றார்.