பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பிற்பகல் 1.00 மணியளவில் ஆரம்பமானது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நம்பிக்கை பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. 

குறித்த இப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் முன்‍வைத்திருந்தார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உறுதிப்படுத்தியிருந்தார். அதனையடுத்து பாராளுமனற உறுப்பினர்கள் ஒரு சிலரின் உரையும் இடம்பெற்றது.

அதன் பின்னர் ரணிலுக்கு ஆதரவான இப் பிரேரணையானது இலத்திரனியல் வாக்கெடுப்பு முறைக்கு விடப்பட்டு 117 வாக்குகளினால் வெற்றி பெற்றது. 

இதேவேளை, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் மக்கள் விடுதலை முன்னணியினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கு கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்ரமசிங்க தனக்கு ஆதரவளித்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து உரையொன்றையும் நிகழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சபை நடவடிக்கையினை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை ஒத்தி வைத்தார்.