பிரிட்டிஸ் பிரதமர் தெரேசா மேயிற்கு எதிராக கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

இன்று இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் தெரேசா மே பிரதமர் பதவியிலிருந்து அகற்றப்படுவார்.

கொன்சவேர்ட்டிவ் கட்சியின்  48 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விடயத்தை தெரேசா மே கையாண்டுவரும் விதத்தி;ற்கு எதிர்ப்பு தெரிவித்தே அவரது கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஓன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது தெரேசா மே  பிரிட்டனின் நலன்களை விட்டுக்கொடுத்துள்ளார் என கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தெரேசா மேயின் திட்டத்தை முன்னெடுத்தால் அரசாங்கம் கவிழும் நிலை உருவாகும் என  கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை என்னிடமுள்ள அனைத்தையும் பயன்படுத்தி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளப்போவதாக தெரேசா மே தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்படவேண்டிய நிலை உருவானால் பிரிட்டன் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தாமதமாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.