இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக அனில் கும்ப்ளே பணியாற்றிய காலத்தில் அவரிற்கும் அணித்தலைவர் விராட்கோலிக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப்போட்டி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றிருந்த  முன்னாள் மகளிர் அணி வீராங்களை டயனா எடுல்ஜியின் மின்னஞ்சல்கள் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.

அனில் கும்ப்ளே  குறித்து அதிருப்தி வெளியிடும் மின்னஞ்சல்களை குறுஞ்செய்திகளை விராட்கோலி தொடர்ச்சியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு அனுப்பினார் என எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கும்ப்ளே  இறுதியில் பதவி விலகவேண்டிய நிலையேற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பயிற்றுவிப்பாளரை தெரிவு செய்வதற்கான முயற்சிகளின் போது சச்சின் டெண்டுல்கர் விவிஎஸ் லக்ஸ்மன் சௌரவ்கங்குலி அடங்கிய குழுவினர் கும்ப்ளே- விராட் மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக விராட்கோலியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என டயனா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் விவிஎஸ் லக்ஸ்மன் சௌரவ்கங்குலி அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழுவினர் அனில்கும்ளேயே தங்கள் தெரிவு என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு தெரிவித்தனர் எனினும் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார் எனவும் டயனா எடுல்ஜி குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் ஆலோசனை குழு இரு வீரர்களும் இணைந்து செயற்படலாம் என ஆலோசனை வழங்கிய போதிலும் கோலி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரியின் நியமனம் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.