பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் உடற்பருமன் பிரச்சினைக்கு ஆளாகி வருவது தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது உலகம் முழுவம் இரண்டு பில்லியன் பேர் உடற்பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு ஒரேயொரு பிள்ளையை மட்டும் பெற்று வளர்க்கும் பெற்றோர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள் என்றும், அவர்கள் தங்களது ஒரே வாரிசை சுகமாக வளர்க்கவேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் ஆசைப்படும் துரித உணவு மற்றும் பக்கற்றுகளில் அடைத்து விற்கப்படும் உணவு வகைகளை சகல வேளைகளிலும் சாப்பிட அளிக்கிறார்கள். 

அத்துடன் மாலை வேளைகளில் அவர்களை மைதானத்திற்கோ அல்லது திறந்த வெளியிலோ விளையாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். இதனால் அவர்களின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு உடல் எடை அதிகரித்து உடற்பருமன் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் படிக்கும் பாடசாலைகளிலும் போதிய அளவிற்கு கண்காணிக்க முடிவதில்லை. இதனால் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் உடற்பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். இதனை கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் சர்க்கரை நோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு முப்பது வயதிலேயே ஆளாகக்கூடும். 

அதனால் உங்களது வீட்டில் இருக்கும் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட சிறார்கள் இருந்தால் அவர்களின் உயரத்திற்கேற்ற எடையைத் தெரிந்து கொண்டு அதனை பராமரிக்கவேண்டும். போதிய அளவு உடற்பயிற்சி, சத்தான சரிசமவிகித உணவு ஆகியவற்றை எடுத்துக் கொள்வதுடன் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் முற்றாக தவிர்க்கவேண்டும். பசித்த பின்னரே சாப்பிடவேண்டும். இது போன்ற பழக்கங்களை வளரிளம் பருவத்தில் வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போது தான் அவர்கள் உடற்பருமன் பிரச்சினையிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

டொக்டர் சிறிதேவி

தொகுப்பு அனுஷா.