அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை? 

Published By: Digital Desk 4

11 Dec, 2018 | 06:59 PM
image

 நிஹால் ஜெயவிக்கிரம 

2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கிறார் போலத் தெரிகிறது. 

பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் பாராளுமன்றத்தில் கொந்தளிப்பான ஒரு அமர்வில் தனது தலைமையிலான அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை ஜனாதிபதி சபைக்குள் அமர்ந்திருந்து நேரடியாகவே கண்டார். தற்போது அவர் அனுபவிக்கின்ற மூன்று அதிகாரங்களைத் தவிர தனது ஏனைய சகல நிறைவேற்று அதிகாரங்களையும் அந்த திருத்தச்சட்டம் அவரிடமிருந்து நீக்கிவிட்டது. தூதுவர்களை நியமிக்கும் அதிகாரம், அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிக்கும் அதிகாரம், மாகாணங்களின் ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஆகியவையே ஜனாதிபதி கொண்டிருக்கும் 

அந்த மூன்று அதிகாரங்களுமாகும். அவற்றைக்கூட ஒருதலைப்பட்சமாக அவரால் செயற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு கூறுவதென்றால், தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு முன்னதாக அந்த தூதுவர் செல்லவிருக்கும் நாட்டு அரசிடமிருந்து எமது வெளியுறவு அமைச்சர் இணக்கத்தைப் பெறவேண்டும். அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?

பிரதமரைப் பதவிநீக்கம் செயவதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி நம்புகிறார். ஆம். அவருக்கு அந்த அதிகாரம் இருந்தது. ஆனால், முன்னொரு காலத்தில் அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் அந்த அதிகாரத்தை  வெளிப்படையாகவே நீக்கிவிட்டது. அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லலை?  

பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெருமளவுக்கு கொண்டிருக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை - அதுவும் அத்தகைய உறுப்பினரை பாராளுமன்றம் அறுதிப்பெரும்பான்மையினால் அடையாளம் காட்டிய பின்னரும் கூட பிரதமராக நியமிக்க தன்னால் மறுப்புத் தெரிவிக்கமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். 

தனக்கு அவரைப் பிடிக்கவில்லை அல்லது அவருடன் பணியாற்ற தன்னால் முடியாது என்ற காரணங்களை முன்வைத்து தனது மறுப்பை நியாயப்படுத்தமுடியும் என்று நம்புகிறார். பிரதமராக நியமிக்கப்படக்கூடிய பாராளுமன்ற உறுப்பினரை ஜனாதிபதி விரும்பவேண்டும், நேசிக்கவேண்டும், மெச்சவேண்டும் என்று அரசியலமைப்பில் எந்த இடத்திலும் கூறப்பட்டிருக்கவில்லை. பிரதமர் ஜனாதிபதியின் ஊழியர் அல்ல. அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?

அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கவேண்டியவராக ஜனாதிபதி இருக்கிறார். ஆனால், அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை முப்பதைத் தாண்டக்கூடாது என்று 19 ஆவது திருத்தம் கூறுகிறது. ஜனாதிபதி 2015 ஆகஸ்டில் தீர்மானித்த அமைச்சர்களின் எண்ணிக்கை அதைவிடவும் மிகவும் அதிகமானதாகும். பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ' தேசிய அரசாங்கமொன்றை' அமைத்திருந்தால் மாத்திரமே  ஜனாதிபதி அமைச்சர்களின் எண்ணிக்கையை முப்பதுக்கும் அதிகமாகத் தீர்மானித்திருக்க முடியும். 

பாராளுமன்றத்தில் கூடுதல் ஆசனங்களைப் பெறும் கட்சி ஏனைய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு அமைப்பதே தேசிய அரசாங்கம் என்று 19 ஆவது திருத்தம் வரையறுத்திருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ( தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. மற்றவை நீங்கலாக) அரசாங்கம் ஒரு கூட்டரசாங்கமே தவிர தேசிய அரசாங்கம் அல்ல. அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?

அமைச்சரவையின் கட்டமைப்பை தன்னால் மாற்றியமைக்க முடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். அவரால் அதைச் செய்திருக்கக்கூடிய நேரம் ஒன்று இருந்தது. ஆனால்,  பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியினால் அமைச்சர் ஒருவரோ அல்லது பிரதியமைச்சர் ஒருவரோ பதவியில் இருந்து அகற்றப்படலாம் என்று 19 ஆவது திருத்தம் கூறுகிறது. 

எனவே ஒரு அமைச்சரையோ அல்லது பிரதியமைச்சரையோ பதவி  நீக்குகின்ற செயன்முறை இப்போது பிரதமரினாலேயே முன்னெடுக்கப்படவேண்டும். பிரதமரின் ஆலோசனையின் பேரில் மாத்திரமே ஜனாதிபதியினால் பதவி நீக்க உத்தரவைப் பிறப்பிக்கவோ அல்லது அமைச்சரவையின் கட்டமைப்பை மாற்றவோ முடியும். அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?

எந்த நேரத்திலும் தன்னால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். முன்னொரு காலத்தில் அவரால் அதைச் செய்திருக்கமுடியும். பாராளுமன்றத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தில் இறுதி ஆறு மாதங்களில் மாத்திரமே அவரால் அதை கலைக்கமுடியும் என்று 19 ஆவது திருத்தம் இப்போது கூறுகிறது. அதற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தைக் கலைக்க அவர் விரும்பினால்  அதன் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பின்னரே அவ்வாறு செய்யமுடியும். 

தனது அதிகாரங்கள், பணிகளுக்குள் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான பொதுவான அதிகாரமும் அடங்குவதால் எந்த நேரத்திலும் தன்னால் பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும் என்று  அவர் நம்புகிறார். அந்த பொதுவான அதிகாரம் பின்னர் கொண்டுவரப்பட்ட ஏற்பாடு ஒன்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்ற சட்டத்தின் ஆட்சியை அவர் அறியாதவராக இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஏற்பாடு எவ்வாறு( பிரகடனத்தின் மூலம்) எப்போது( நாலரை வருடங்களுக்குப் பிறகு ) அந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம் என்பதை விசேடப்படுத்திக் கூறுகிறது. அதை ஏன் அவர்கள் அவருக்கு கூறவில்லை? 

பாராளுமன்றத்தில் உகந்த முறையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவில்லை என்று தான் அபிப்பிராயப்பட்டால் அத்தீர்மானத்தை ஏற்காமல் மறுக்கமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மீது ஜனாதிபதிக்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அது முற்றுமுழுதாக சபாநாயகருக்குரிய விடயம். பாராளுமன்றச் செயற்பாடுகள் உகந்தமுறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றனவா இல்லையா என்பதை சபாநாயகர் மாத்திரமே தீர்மானிக்க முடியும். 

பாராளுமன்றச் செயற்பாடுகளின் சட்டபூர்வத்தன்மை அல்லது தகுதிப்பொருத்தம் குறித்து நிறைவேற்று அதிகாரபீடமோ ( அதன் தலைவராக ஜனாதிபதி) அல்லது நீதித்துறையோ எந்த அறிவிப்பையும் செய்யமுடியாது. பல வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தின் தீர்மானம் ஒன்றை சபாநாயகர் ஏற்றுக்கொள்வதைத் தடுக்க பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவின் கீழான நீதித்துறை முயற்சித்தபோது, அப்போதைய சபாநாயகர் அநுரா பண்டாரநாயக்க சட்டநிபுணர்களின் ஆலோசனையின் பேரில் அந்த நடவடிக்கையை நிராகரித்து எல்லைக்கோடு எங்கே இருக்கின்றது என்பதை வரையறுத்தார். அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?

பிரதமரும் அமைச்சர்களும் இல்லாதபட்சத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள் ஊடாக அரசாங்கத்தை தன்னால் நிருவகிக்கமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார் போலத் தோன்றுகிறது. 19 ஆவது திருத்தம் உகந்த நிரல் ஒழுங்கை பின்வருமாறு விபரப்படுத்துகிறது ; (1) பிரதமரை ஜனாதிபதி நியமிக்கிறார். (2) அமைச்சர்களின் எண்ணிக்கையையும் அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அத்தகைய அமைச்சர்களின் பொறுப்புக்களையும் பணிகளையும் ஜனாதிபதி தீராமானிக்கிறார். (3) அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களை பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி நியமிக்கிறார். 

(4) ஒரு அமைச்சரின் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒரு செயலாளரை ஜனாதிபதி நியமிக்கிறார். (5) அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கும் பணிப்புரைக்கும் ஆட்பட்டவராக செயலாளர் அமைச்சரின் பொறுப்பின் கீழ் வருகின்ற அரசாங்கத் திணைக்களங்கள், மற்றும் நிறுவனங்களை மேற்பார்வை செய்கிறார். (6) அமைச்சரவை கலைக்கப்பட்டதும் அமைச்சுக்களின் செயலாளர்களும் பதவியில் இல்லாமல் போகிறார்கள். செயலாளர் தனது அமைச்சரின் பணிப்பின் கீழ் செயற்படுகின்றாரே தவிர ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் அல்ல. அத்துடன் அமைச்சரவை கலைக்கப்பட்டதும் ஒவ்வொரு அமைச்சினதும் செயலாளரும் பதவியில் இல்லாமல் போகிறார் என்று அரசியலமைப்பு கூறுகிறது. அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?

மகிந்த ராஜபக்சவின் '  அரசாங்கம் ' மீது நம்பிக்கையில்லை என்று பாராளுமன்றம் திரும்பத்திரும்ப நிறவேற்றிய மூன்று தீர்மானங்களை தன்னால் அலட்சியம் செய்யமுடியும் என்று ஜனாதிபதி நம்புகிறார். அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாராளுமன்றம் நிறைவேற்றினால்  அமைச்சரவை கலைக்கப்பட்டதாகிறது என்றும் புதிய பிரதமரை, அமைச்சர்களை, பிரதியமைச்சர்களை ஜனாதிபதி நியமிப்பார் என்றும் அரசியலமைப்பின் உறுப்புரை 48(2) கூறுகிறது. ஆனால், பல வாரங்களாக ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை. முற்றிலும் பொறுப்பற்ற முறையில் நடந்து நாட்டை ஒரு அராஜக நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறார். நாடு அதில் வாழ்கின்ற எம்மெல்லோருக்கும் சொந்தமானது. தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் பிரகாரம் செயற்படமுடியும் என்று நம்புகின்ற ஒரு தனிநபருக்கு சொந்தமானதல்ல. அதை ஏன் அவர்கள் அவருக்குச் சொல்லவில்லை?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22