(ஆர்.விதுஷா)

ஆசியாவின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாநகர சபையை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்த கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க, ஆசிய நாடுகளின் ஏனைய நகரங்களைப்போன்று கொழும்பு  நகரையும் தொழில்நுட்ப ரீதியாகவும் , ஏனைய அடிப்படை வசதிகளிலும் வளர்ச்சி அடைந்த நகராக உருவாக்க வேண்டும் எனவும் அதற்காக பிரஜைகள் அபிவிருத்தி பல்நோக்கு மத்திய நிலைய இரண்டாம் கட்ட நிர்மாணத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன  எனவும் தெரிவித்தார். 

பிரஜைகள் அபிவிருத்தி பல்நோக்கு மத்திய நிலைய இரண்டாம் கட்ட நிர்மாணத்துக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றது. அதில்  கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் , 

கொழும்பு மாநகர சபை சுமார் 150 வருடகால வரலாற்றை கொண்டதாக காணப்படுகின்றது.   அந்த வகையில் ஆசிய நாடுகளின் ஏனைய நகரங்களைப்போன்று தொழில்நுட்ப ரீதியாகவும் , ஏனைய அடிப்படை வசதிகளில் வழர்ச்சி கண்ட நகராக உருவாக்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முயற்சிக்க வேண்டும்.  இவ்வாறான செயற்பாடுகளை  செயற்படுத்த முன்வராத நிலையிலேயே கொழும்பு மாநகரில் குப்பைப்பிரச்சினை தழைத்தோங்கியுள்ளமையை காணக்கூடியதாகவுள்ளது. இத்தகைய நிலைமையை மாற்றியமைக்கவேண்டும் . 

அத்துடன், கொழும்பு மாநகரை ஆசியாவில் தலைசிறந்த நகராக உருவாக்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அபிவிருத்தியை இலக்காக கொண்டு அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் . 

அதற்காக பிரஜைகள் அபிவிருத்தி பல்நோக்கு மத்திய நிலைய இரண்டாம் கட்ட நிர்மாணத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபாய்  வரையில் செலவிடப்பட்டுள்ளது.