இந்தியாவில், பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில், கடந்த கால தவறுகளுக்கு தண்டனையாக, சிரோன்மணி அகாலி தள கட்சி தலைவர், சுக்பீர் சிங் பாதலும், அவரது மனைவியும் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர், அங்கிருந்த செருப்புகளை சுத்தம் செய்துள்ளனர்.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங், ஆட்சி நடைபெறுகிறது. சீக்கியர்கள் ஏதாவது தவறு செய்தால், அந்த மதத் தலைவர்கள் அளிக்கும் தண்டனையை ஏற்று, அமிர்தசரசில் உள்ள, பொற்கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை சுத்தம் செய்தல், பாத்திரம் கழுவுதல் போன்ற பணிகளை செய்வது வழக்கம்.

இந்நிலையில், பஞ்சாபில், 2015ல், அகாலி தளம் - பா.ஜ., ஆட்சியின் போது, சீக்கிய மத நுாலான குரு கிரந்த சாஹிப்பை அவமதிக்கும் வகையில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இவற்றுக்கு தண்டனையாக, சமீபத்தில், அகாலி தள கட்சி தலைவர் சுக்பீர் பாதல், அவரது மனைவியும் மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சருமான, ஹர்சிம்ரத் கவுர், உட்பட கட்சி தலைவர்கள், பொற்கோவிலில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மத்திய அமைச்சர் உட்பட, கட்சி தலைவர்கள் அனைவரும் சாதாரண மக்களை போன்று, பொற்கோவிலுக்கு வரும் பக்தர்களின் செருப்புகளை துடைத்தல், பாத்திரம் கழுவுதல் மற்றும் சமையலறை பணிகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.