அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டென்டுல்கர், வீரேந்திர சேவாக் மற்றும் அவுஸ்திரேலிய அணியின் சுழற் பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் ஆகியோர் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இப் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலிய சுற்றுப் பயணித்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது இதுதான் முதல்முறை என்பதால், வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்படுவதுடன், அவுஸ்திரேலிய மண்ணில் பெறும் ஆறாவது வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இந்த வெற்றியை முன்னணி வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

வெற்றியுடன் கூடிய அருமையான தொடக்கத்தைக் கொடுத்து 2003 ஆம் ஆண்டு நினைவுகளை ஏற்படுத்திவிட்டீர்கள் என்று இந்திய அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“ டெஸ்ட் கிரிக்கெட்தான் சிறந்த கிரிக்கெட். இறுதிவரை அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மிகச்சிறப்பாகப் போராடினார்கள். ஆனால், இந்திய அணியினர் அவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள். முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தநிலையில், டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றிருப்பது சிறப்பாகும் என தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்ன் தனது ட்விட்டர் பக்கத்தில், 

அவுஸ்திரேலியாவின் கடைசி வரிசை துடுப்பாட்ட வீரர்கள் வெற்றிக்காக சிறப்பாகப் போராடினார்கள். டெஸ்ட் கிரிக்கெட் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். இரு தரப்புக்கும் மிகவும் கடினமான டெஸ்ட் போட்டியாக இருந்தது. வெற்றி பெற்ற கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், கோலிக்கும் பாராட்டுக்குள். மிகச்சிறப்பான வெற்றியை இந்தியா அடைந்திருக்கிறது. இதை பெர்த் மைதானத்துக்கும் எடுத்துவாருங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.