(நா.தனுஜா)

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அரசியல் கைதிகள் விடுதலைக்கான தேசிய இயக்கம், இனவாத குடியேற்றங்களுக்கு எதிரான இயக்கம் மற்றும் சமவுரிமை இயக்கம் என்பன இணைந்து பொதுமக்களைத் திரட்டி அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, தோட்டத்தொழிலாளர் சம்பள உயர்வு, இனங்களுக்கு இடையிலான சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இன்று திங்கட்கிழமை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

மேற்படி ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன், ஏராளமான பொதுமக்கள் பங்கெடுத்திருந்தனர். மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு காணி விடுவிப்பிற்காக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். 

போராட்டக்காரர்கள் எமது காணிகளை விடுதலை செய், இராணுவமே வெளியேறு, அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய், புதிய பயங்கரவாதத்தடைச் சட்டத்தை உடன்நிறுத்து, காணாமல் போனோருக்கு என்ன நடந்தது?, தோட்டத்தொழிலாளர் கூலியை 1500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும், இனவாதக் குடியேற்றத்தை உடன்நிறுத்து, மகாவலியின் போர்வையில் நடத்தப்படும் தமிழர்  காணிக்கொள்ளையை நிறுத்து, மைத்திரி கொடுத்த வாக்கை நிறைவேற்று, எங்கள் தாயகத்தை துண்டாடாதே உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.