அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழை  இன்று திங்கட்கிழமை (10) சற்று ஓய்ந்துள்ளதனால் மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளதுடன் தாழ்நில குடியிருப்பு பிரதேசங்கள் மற்றும் உள்ளுர் வீதிகளில் தேங்கி நின்ற மழை நீர் துரிதமாக வடிந்து வருகின்றது.

மழை சற்று ஓய்ந்துள்ளதினையடுத்து மக்கள் தங்களுக்கு தேவையான அன்றாட அத்தியாவசியப் பொருட்களை சந்தைக்கு சென்று மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து தங்கு தடையின்றி இடம்பெற்று வருவடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் மக்களுக்கான சேவைகள் இடம்பெற்று வருகின்றது.

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பெய்து வந்த காற்றுடன் கூடிய அடை மழையினால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருந்ததுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உடன் தகவல் திரட்டுமாறு பிரதேச செயலாளர்களினால் பணிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலநிலை மாற்றத்தினால் மேலும் திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மக்களுக்கான அறிவுறுத்தல்களை  அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ், இரானுவத்தினரால் மதஸ்தலங்கள் மற்றும் ஒலி பெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டு வருவகின்றது. 

 இதேவேளை தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்றும் பொருட்டு உள்ளுராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. களப்புகள், வாய்க்கால்கள், வடிகான்கள் மற்றும் ஆறுகளில் நீரோடுவதற்கான தடைகள் அகற்றப்பட்டு வருவதுடன் முகத்துவாரங்களும் வெட்டப்பட்டு வெள்ள நீரை கடலுக்குள் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தேங்கி நின்ற மழை நீர் மிகவும் விரைவாக வடிந்து செல்வதினை அவதானிக்கு முடிகின்றது.

 எற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் கடல் கொந்தளிப்பாக உள்ளதனால் கடற்தொழிலாளா்கள் கடந்த ஒரு வாரமாக தொழிலின்றி ஜீவனோபாயம்  பாதிக்கப்பட்டுள்ளனா். இதேவேளை ஒலுவில் பிரதேசத்தில் இரு பாலங்கங்கள் சேதமடைந்து காணப்படுவதுடன்  வேலிகள் மற்றும் தென்னை மரங்களும் பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அடித்துச் சேதமாக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.