(எம்.மனோசித்ரா)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே சாரும் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ, பொதுஜன பெரமுன அதனை விரும்பாவிடின் உத்தேச கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து அமைக்க உத்தேசித்துள்ள கூட்டணி தொடர்பில் இரு தரப்பினராலும் மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில், அது தொடர்பில் சுதந்திர கட்சியின் நிலைபாட்டினை வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட தீர்மானித்ததன் அடிப்படையிலேயே அவரை பிரதமராக நியமித்தார். நாட்டில் சகல அதிகாரங்களும் மிக்கவராக ஜனாதிபதி காணப்படுகின்றார். எனவே இந்த புதிய கூட்டணியின் தலைமைத்துவத்தை அவரால் மாத்திரமே வகிக்க முடியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.