உலக நாடுகள் முழுவதிலும் ஜனநாயக ஆட்சியை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டபோதே பிரதிநிதித்துவ அரசியலின் இன்றியமையாத தன்மை உணரப்பட்டுவிட்டது. மக்களாட்சி முறையின் கீழ் நாட்டின் ஆட்சி அதிகாரமானது சட்ட ரீதியாக குறிப்பிட்ட சில வகுப்பினரிடம் அல்லது ஓர் அமைப்பினரிடமோ இருப்பதில்லை. அது சமூகத்திலுள்ள சகல அங்கத்தவர்களிடமும் இருக்கின்றது.

பண்டைய கிரேக்க நகர அரசுகள் போல நவீன அரசுகளில் மக்கள் நேரடியாக ஆட்சியில் பங்குபெற்றுவது என்பது சாத்தியமற்றதான நிலையில் அவர்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமது மக்கள் சார்பாக நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

இதனாலேயே நவீன ஜனநாயகமானது பிரதிநித்துவ ஜனநாயமாக அழைக்கப்படுவதாக கலாநிதி கனகையா இரகுநாதன் தெரிவித்துள்ளார். மேலும் இப் பிரதிநித்துவ ஜனநாயக அரசியலின் கருவியாகவே தேர்தல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பண்டைய கிரேக்க நகர அரசுகளின் நகரங்கள் வரையறுக்கப்பட்டு அவை சிறிய நிலப்பரப்பாகவும், குறைந்தளவான மக்கள் தொகையை கொண்டதாகவும், அவர்களது தேவைகள் மட்டுபடுத்தப்பட்டதாகவும் காணப்பட்டதால் அக் காலத்தில் மக்கள் நேரடியாக ஆட்சி நடவடிக்கைகளில் பங்குபற்றியிருந்தனர்.

ஆனால் நவீன அரசுகளின் நிலப்பரப்பு பரந்துபட்டதாக விஸ்தீரனமுடைய நிலங்களாக காணப்படுவதாலும், மக்கள் தொகை அதிகமாக காணப்படுவதாலும், சகல மக்களையும் ஒருங்கிணைத்து அபிப்பிராயத்தை பெறுவது என்பது கடினம். எனவே இது போன்ற காரணங்களால் நேரடி ஜனநாயக முறை இல்லாமல் செய்யப்பட்டு பிரதிநித்துவ ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப் பிரதிநித்துவ ஜனநாயக அரசியலில் முக்கியத்துவம் பெறுவது யாதெனில் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு அவர்கள் சார்பாக அரசியல் நிர்வாகத்தை கொண்டு செல்லப்போகும் அப் பிரிதிநியை தெரிவு செய்வதே என்பதாகும். ஏனெனில் அவ்வாறு தெரிவு செய்யப்படுவபர் தன்னை தெரிவு செய்த மக்களுக்கு சரியான சேவையை வழங்க கூடியவராக இருக்க வேண்டும் என்பதாகும்.

இத்தகைய நிலையில் பிரதிநித்துவ அரசியலில் பெண்களின் பங்குபற்றல் என்பது மிக குறைவாகவே உள்ளது. அரசியல் நிறுவனங்களில் பெண்களின் குறைவான பிரதிநித்துவம் என்பது இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியேகமானதன்று. மிக சில விதிவிலக்குகளுடன் உலகம் முழுவதுமே ஒரு பொது போக்காகவே இது காணப்படுகின்றது எனலாம்.

குறிப்பாக தெற்காசிய நாடுகளில் பொதுவான பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றில் சகல பெண்களுக்குமான நீதி நியாயத்தையும், சமத்துவத்தையும் எவ்வாறு நிலைப்படுத்துவது என்பது முக்கியமானதாகும். இலங்கையில் பெண்கள் தமது உரிமைகளை கோரி மிகவும் ஆர்வத்துடன் போராடி வருகின்ற அதேநேரம், வாக்களிப்பு என்பதற்கு அப்பால் தமது அரசியல் சமூக நோக்கங்களை தெளிவாக எடுத்து காட்டுவதில் இன்று வரையில் கட்டுபட்டுத்தப்பட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.

தொடர்ந்தும் நாட்டின் முதல் பிரஜை என்ற எண்ணம் ஆண்களுக்கு மாத்திரமே மட்டுபட்டுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையில் பெண்கள் ஓரங்கட்பட்ட வண்ணமே உள்ளார்கள். எனினும் தற்போது பெண்கள் அரசியலில், அரசியல் நிறுவனங்களில் முக்கிய இடம் பெறுவதானது, பெண்கள் சார்ந்த முன்னேற்றத்திற்கும், வலுவூட்டலிக்கும் மிகவும் அவசியமானது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுவரை பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியிருந்த இலங்கையில் பெண்களின் அரசியல் பங்குபற்றல் என்பது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல்களில் குறைவாகவே காணப்பட்டது. எனினும் இவ் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தல்களில் பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் தொடர்பாக ஓர் திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்த்து.

அந்தவகையில் அத் திருத்தம் தொடர்பாக பார்ப்பதற்கு முன்னர், இலங்கையில் பெண்களின் அரசியல் பிரவேசம் தொடர்பாக வரலாற்றை அறிவது பயனுள்ளதாக அமையும். அரசியல் 1932ஆம் ஆண்டு கொழும்பு வடக்கு தொகுதியின் சார்பில் அரசாங்க சபைக்கு நேசம் சரவணமுத்து தெரிவு செய்யப்பட்டமை தமிழ் பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு சிறந்த அடியெடுத்து கொடுத்தது. 1989ஆம் ஆண்டு தனது கணவரின் மரணத்துக்கு பின்னர் இராஜமனோகரி புலேந்திரன் வவுனியா தொகுதிக்கு நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் ஜக்கிய தேசிய கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 1994ஆம் ஆண்டு மீளவும் தெரிவு செய்யப்பட்டதோடு கல்வி இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்று மந்திரி பதவி வகித்த முதலாவது தமிழ் பெண்மனி என்ற பெயரை பெற்றிருந்தார்.

அதேபோன்று 1947ஆம் ஆண்டு கொழும்பு மத்தி பல் உறுப்பினர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட ஆயிஷா ரவூப் என்பவரே அரசியலில் ஈடுபட்ட முதலாவது முஸ்லீம் பெண்மணி ஆவார். இதே போன்று திருமதி பண்டாரநாயக்க பெண்கள் அரசியல் வாதிகளுக்கு ஒரு சக்தி மிக்க முன்மாதிரியாக கொள்ளப்படுகின்றார். அவர் நாட்டை வழிநடாத்திய போது தனது பெண்மை பற்றியும் பெண்களின் சரியான வகிபங்கு பற்றியும் அவர் பெரிதும் அக்கறை கொண்டிருந்த்தாக  இலங்கையில் பெண்களும் ஆட்சி முறையும் என்ற நூலில் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.

இவ்வாறு இலங்கையில் இம் முறை இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பங்குபற்றலானது 25 வீதமாக இருக்க வேண்டும் என்ற திருத்தமானது கொண்டுவரப்பட்டது. முதன்மை சட்டத்தின் பிரிவு 27 ஊ பிரிவானது பின்வரும் பிரிவின் மூலமாக மாற்றப்படுகிறது.

அதாவது 27ஊ (1) இக்கட்டளை சட்டத்தின் ஏனைய ஏற்பாடுகள் முரணாக காணப்படினும், ஒவ்வொரு உள்ளுராட்சி சபையிலும் 25 வீதமான உறுப்பினர்கள் பெண்களாக காணப்பட வேண்டும் என அத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந் நடவடிக்கையானது இலங்கை அரசியலில் பெண்கள் பிரிதிநித்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமையும் என அப்போது பரவலாக கூறப்பட்டது.

ஆனாலும் இவ் திருத்த சட்டத்திலும் சில குறைப்பாடுகள் காணப்படுவதாக பெண் வேட்பாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.இதன்படி இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் பெண்களை வலுப்படுத்தி தீர்மானம் மேற்கொள்ளும் திறைகளில் பங்குபெற செய்தல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் விழுது நிறுவனத்தால் பயிற்றப்பட்டு தேர்தலில் போட்டியிட்ட முல்லைதீவு, கிளிநொச்சி, பூநகரி போன்ற பகுதிகளை சேர்ந்த பெண்களிடம் இப் பெண் பிரதிநித்துவம் தொடர்பாக அவர்களது கருத்துக்களை பெற்றிருந்தோம்.

முல்லைதீவினை சேர்ந்த அருளானந்தம் செல்வரானி என்ற பெண் தெரிவிக்கையில்,

நான் ஏற்கனவே கிராம மட்டத்தில் சமூக சேவைகளை செய்து வருகின்றேன். அரசியல் பிரதிநித்துவம் தொடர்பாக விழுது நிறுவனமானது பயிற்சிகளை வழங்கியிருந்த்து. இப் பயிற்சிகளினூடாக சுயேட்சை குழு ஒன்றில் போட்டியிட்டு ஜந்து ஆசனங்களை பெற்றுக்கொண்டோம். தற்போது சுழற்சி முறையில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது என தீர்மானித்துள்ளோம். பெண்கள் அரசியலில் உள்வாங்கப்படுவதனூடாகவே பெண்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்து அதற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.

முள்ளியவளை பிரதேசத்தை சேர்ந்த இராஜேஸ்வரி இராசம்மா என்ற பெண் தெரிவிக்கையில்,

அரசியல் இம் முறை 25வீதம் பெண் பிரதிநித்துவம் இருக்க வேண்டும் என கூறப்பட்டதையடுத்து விழுது நிறுவனமானது எமக்கு அது தொடர்பான பயிற்சிகளை வழங்கியிருந்த்து. இதனையடுத்து எமது கிராம மக்களும் ஆதரவு தந்தார்கள். ஆனால் நான் போட்டியிட்ட கட்சியில் எனது பெயர் நேரடி வேட்பாளர் என இருந்த போதும் பின்னர் இறுதி நேரத்தில் பட்டியல் வேட்பாளர் பெயரில் சேர்கப்பட்டுவிட்டது. அதற்கு பதிலாக பல்கலைகழக மாணவன் ஒருவனது பெயர் சேர்க்கப்பட்டது. ஆனாலும் நாம் எமது கட்சியின் வெற்றிக்காக உழைத்திருந்தோம்.

காலம் காலம் காலமாக பெண்கள் ஓரங்க்கட்டப்படும் நிலை மாற்றமடைய வேண்டும். பெண்கள் தொடர்பான பிரச்ணனைகளை தெரிந்தவர்களே அவர்களது பிரச்சனையை தீர்த்து வைக்க கூடியதாக இருக்கும். எனவே பெண்களின் அரசியல் பிரதிநித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்கு பெண்களது பிரதிநித்துவம் என்பது நேரடி வேட்பாளர் என்ற கட்டாயம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.

சுந்தரலிங்கம் கலைச்செல்வி என்ற பெண் தெரிவிக்கையில்,

21 அமைப்புக்களில் பிரதிநியாகவுள்ளேன். ஆரம்பத்தில் அரசியலில் பங்குபற்றுதல் தொடர்பாக சிந்தனை இருக்கவில்லை. பின்னர் விழுது போன்ற பல அமைப்புக்கள் அது தொடர்பான பயிற்சிகளை வழங்கியிருந்தார்கள். இதனால் நானும் அரசியல் பெண்களின் பிரதிநிதியாக செல்ல தீர்மானித்தேன்.

இதன்படி எனது கட்சியில் நான் நேரடி வேட்பாளராகவே ஆரம்பத்திம் பெயரிடப்பட்டிருந்தேன். இருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் இரவே எனது நேரடி வேட்பாளரிலிருந்து நீக்கப்பட்டு பட்டியல் முறையில் சேர்கப்பட்டது. இதன்போது எனக்கு தொடர்ந்து கட்சிக்காக செயற்பட வெறுப்பு ஏற்பட்டது. எனினும் நான்பெற்றுக்கொண்ட பயிற்சிகளூடாக இணைந்து செயற்பட முடிவெடுத்து தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டேன்.

எனக்கு பதிலாக நேரடி வேட்பாளராக நிறுத்தப்பட்டவராலேயே எனக்கு சவால்கள் ஏற்பட்டது. நான் அரசியலில் நூழைந்தமையால் எனது மகனின் கல்வி பாதிப்படைந்துவிட்டது. நன்றாக படிக்க கூடிய அவர் மீது கஞ்சா கடத்தல் என பொய்யான குற்றச்சாட்டு சுமத்து கைது செய்யப்படவிருந்த நிலையில் நான் அது பொய்யான குற்றச்சாட்டு என நிரூபித்து மகனை கூட்டி வந்திருந்தேன். இதனால் எனது மகன் பாடசாலை செல்வதையே நிறுத்திவிட்டார்.

இப்போது தேர்தலில் போட்டியிட்டமையால் நான் தலமைத்துவம் உடைய பெண் என அடையாளப்படுத்தப்பட்டு பெண்கள் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவியாக பணியாற்றி வருகின்றேன்.அரசியல் பிரதிநித்துவம் கிடைக்காவிட்டாலும், இச் சங்கத்தினால் பெற்றுக்கொள்ள கூடிய உதவிகளை பெற்று எனது சமூகத்திற்கு உதவி வருகின்றேன். இவை தவிர பெண்கள் சிறுவர் துஸ்பிரயோகம், நுண்கடன் பிரச்சனை, குடும்ப வன்முறை, சட்டவிரோத மது ஒழிப்பு போன்றவற்றிக்கு எதிராக செயற்பட்டு வருகின்றேன். ஆனால் இத் தேர்தல் முறையில் 30 வீதம் பெண்கள் நேரடி பிரதிநித்துவம் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட வேண்டும். அவ்வாறானாலே பெண்கள் பிரதிநித்துவம் உறுதிப்படுத்தப்படும்.

கிளிநொச்சியை சேர்ந்த சாந்தினி என்ற பெண் தெரிவிக்கையில்,

தொடர்ச்சியாக பெண்கள் கீழ் மட்டத்தில் இருப்பதை இல்லாமல் செய்து அவர்களையும் அரசியல் ரீதியாக மேலே கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்குள் சென்றேன். எனக்கும் விழுது நிறுவனம் அரசியலில் பெண்களின் பங்குபற்றல் தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் கற்றுத் தந்திருந்த்து. ஆனால் இத் தேர்தலில் பட்டியலில் பெண்களின் பிரதிநித்துவத்தை உட்படுத்தியது நியாயமற்ற செயற்பாடேயாகும். நேரடி வேட்பாளராக பெண்களை உள்வாங்கியிருக்க வேண்டும்.

பூநகரியை சேர்ந்த வனிதா மகேஸ்வரன் என்பவர் தெரிவிக்கையில்,

கிராம மட்டத்தில் சமூக சேவைகளை செய்து வருகின்றேன். பெண்கள் அரசியலில் பங்குபற்றுதல் தொடர்பாக நான் கலந்துகொண்ட பயிற்சிகள் ஊடாக நான் முன்மாதிரியாக இத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக பங்குபற்றியிருந்தேன். ஆனால் இத் தேர்தலில் பெண்கள் நேரடி வேட்பாளர்களாக உள்வாங்கப்படாமை ஒரு குறைபாடேயாகும். ஏனெனில் ஒரு தீர்மானம் எடுக்கும் சபையில் ஒரு பெண் இருந்து பேசுவதை விடவும் அவரோடு இன்னும் மூன்று பெண்கள் சேர்ந்த பேசுவது வலுமிக்கதாகவும் பெண்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்கவும் உறுதியாக இருக்கும்.

சுரேஸ்குமார் உஷானந்தினி என்ற பெண் தெரிவிக்கையில்,

கிராம மட்டங்களில் உள்ள பெண்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் அதிகாரத்தில் இருப்பதனூடாகவே அவற்றை செய்ய முடியும். பெண்கள் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதுவே இத் தேர்தலில் போட்டியிட சென்ற பின்னரே தெரியவந்த்து. எனையவர்களை போல எனக்கும் விழுது நிறுவனம் அரசியல் ரீதியான பயிற்சிகளை வழங்கி வலுவூட்டியிருந்த்து.

ஏனைய பெண்களை போலவே தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த போது சிலர் தவறான செயற்பாடுகளை மேற்கொண்டனர். எனினும் அவை பற்றி நான் கவலைப்படாது தொடர்ந்து எனதும் எனது கட்சிக்கான வெற்றியை நோக்கி செயற்பட்டேன். நான் இத் தேர்தலில் பிரதிநித்துவம் பெறாவிட்டாலும் பிரேதச சபையின் ஆலோசனை குழு ஒன்றின் அங்கத்தவராகவுள்ளேன். பொதுவாக பெண்களின் கருத்துக்கள் சபையில் ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது குறைவாகவே உள்ளது. அதற்கு காரணம் அங்கு பெண்களின் உறுப்பினர்கள் குறைவாக இருப்பதேயாகும்.

எனவே பெண்களின் பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு இம் முறை தேர்தலில் கொண்டு வரப்பட்ட 25 வீதமான பெண் பிரதிநித்துவம் என்பது மேலும் திருத்தப்பட்டு இச் வீதம் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் அவை கட்டாயமாக நேரடி வேட்பாளர் என்ற திருத்தமும் கொண்டுவரப்பட வேண்டும். இவ்வாறு கடந்த உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர்கள் தமது கருத்துக்களை பகிர்ந்திருந்தார்கள். ஆனால் இவர்கள் தமது தேர்தல் போட்டி தொடர்பாக பல விதமான கருத்துக்களை தெரிவித்தாலும் ஒரு விடயத்தில் அனைவரும் ஒற்றுமைப்படுகின்றமையை அவதானிக்க முடிந்தது.

அதாவது அனைவருமே 25 வீதமான பெண் பிரதிநித்துவம் என்பதை நேரடி வேட்பாளர் என்ற கட்டாயமாக கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார்கள். கடந்த தேர்தல்களில் 25 வீதமான பெண் பிரதிநித்துவம் என்பது கட்டாயமாக்கப்படாத போதும் இம் முறை உள்ளூராட்சி தேர்தலில் அது கட்டாயமாக்கப்பட்டதே தவிர அவ் பெண் பிரதிநித்துவமானது நேரடி வேட்பாளர் என்ற வரையறையை கூறவில்லை.

இதனால் பல கட்சிகள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தியிருந்தை அவதானிக்க முடிந்தது. அதாவது 25 வீதமான பெண்களை தமது வேட்பாளர் பட்டியிலில் உள்வாங்கிவிட்டு, அவர்களை போனஸ் ஆசன தெரிவில் சேர்த்துள்ளனர். இதனால் பல பெண்கள் தமது கட்சிக்காகவும் சுயேட்சைக் குழுவுக்காகவும் பல்வேறு ஈடர்களுக்கு மத்தியில் பணியாற்றிய போதும் தமக்கான பிரதிநித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் சென்றுள்ளார்கள். இது பல பெண்களிடம் மன ரீதியான ஏமாற்றத்தையும் விரகத்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாகவே இலங்கையை பொறுத்த வரையில் பெண்களே அதிகமாகவுள்ளார்கள். ஆனால் அவர்களிடம் வாக்கு பெற்று அதிகமாக அரசியல் பிரதிநித்துவத்தை பெறுவது ஆண்களேயாகும். அவ்வாறு பிரதிதிந்துவத்தை பெற்று செல்லும் அவர்களும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தவோ அல்லது அதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவோ முன்னிற்பதுமில்லை. மாறாக அங்கு பிரதிநித்துவம் பெற்றிருக்கும் ஒரு சில பெண்களின் கோரிக்கைகளும் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.

எனவே நாட்டில் ஆட்சித்துறை பிரதிநிதித்துவத்தில் பெண்களின் பிரதிநித்துவமானது பேரம் பேசும் தகுதியுடையதாக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் மேலும் திருத்தம் செய்யப்பட்டு 25 வீதம் அல்லது அதற்கு இன்னும் அதிகமாக பெண்களின் நேரடி பிரதிநித்துவம் ஆட்சித்துறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டமூலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனூடாகவே பெண்களின் தேவைகள் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்து அவற்றை நிவர்த்தி செய்யவும் பெண்களை வலுப்படுத்தவும் முடியுமாக இருக்கும்.

(ரி.விரூஷன் )