அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸுக்காக 307 ஓட்டங்களை குவித்தது.

ஏற்கனவே முதல் இன்னிங்சில் 15 ஓட்ட முன்னிலைப் பெற்றிருந்ததால் அவுஸ்திரேலியா அணிக்கு வெற்றியிலக்காக 323 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 323 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை குவித்திருந்தது.

ஆடுகளத்தில் ஷென் மார்ஸ் 31 ஓட்டத்துடனும், ஹெட் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க அவுஸ்திரேலிய அணி 119.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 291 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக ஷென் மார்ஷ் 60 ஓட்டங்களையும், டிம் பெயின் 41 ஓட்டத்தையும்,நெதன் லியோன் 38 ஓட்டத்தையும், பேட் கம்மின்ஸ் மற்றும் மிச்செல் ஸ்டாக்ஸ் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்,

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக பும்ரா மற்றும் மொஹமட் ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி பேர்த்தில் ஆரம்பமாகவுள்ளது.