பேருவளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் நடவடிக்கைகள் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

பேருவளை 231 கிலோகிராம் 54 கிராம் ஹெரோயின்  போதைப்பொருள் கடத்தலின் பின்னணியைத்தேடி  பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் அடிப்படையிலேயே மேற்கண்ட விடயம் தெரியவந்துள்ளது. 

அத்துடன் நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கடத்தல்காரரினால் இந்த போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடத்தல்காரர்களின் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகளும் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை ஹெரோயினை கடத்திச் சென்ன ட்ரோலர் படகின் உரிமையாளர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.