மட்டக்களப்பு, வவுணதீவு வாவிப் பாலத்தின் ஒரு பகுதியில் அமைந்திருந்த காவற் சாவடியில் கடமையிலிருந்த சமயம் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் படுகொலையைக் கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்று இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் மட்டக்களப்பு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

'டொலர்களுக்கு சமாதானத்தினை அழிக்காதே, வடக்கு- கிழக்கின் அமைதியில் கை வைக்காதே, சமாதானத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக சட்டத்தினை நடைமுறைப்படுத்து, சமாதானத்தினை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒன்றுகூடுங்கள்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்தியிருந்தனர்.

அத்துடன் 'கொலையாளிகள் தங்களது தவறை உணர்ந்து தாமாகவே சரணடைய வேண்டும், நாட்டில் இனிமேல் இவ்வாறானதொரு சம்பவம் நடைபெறாத வண்ணம் உரிய தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.' என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருத்துத் தெரிவித்தனர்.