இத்தாலியிலுள்ள இரவு நேர உல்லாச விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு இரவு நேர உல்லாச விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகர் சிபேரா எபஸ்தாவின் இசைநிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். 

அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் அடிபட்டும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர்.

நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இசைநிகழ்ச்சி நடைபெற்றபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நபர் திடீரென மிளகு ஸ்பிரேயை தெளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது