மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து வவுனியாவில்  ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையைக் கண்டித்து கிராம மக்களின் ஏற்பாட்டில் வவுனியா ஈச்சங்குளத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "மட்டக்களப்பு - வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் கொலையினை கண்டிக்கின்றோம்" ,  "30 வருட யுத்தத்தினால் நாம் துயரப்பட்டது போதும்" , "ஒன்று பட்டு எழுந்திடுவோம் பிரதேச அபிவிருத்திக்காக கை கொடுப்போம்" , "சமாதானத்தினை சீர் குலைக்கும் நபர்களை உடனடியாக கைது செய்" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாதைகளை ஏந்திய வண்ணம் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 ஈச்சங்குளம் தவசியாகுளம் அ.த.க பாடசாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய போராட்டமானது அமைதியான முறையில் ஈச்சங்குளம் 611 ஆவது இராணுவ தலைமையகம் வரை சென்றடைந்தது.

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 611 ஆவது பிரிவின் இராணுவ தளபதி ஆகியவர்களிடம் கையளித்தனர்.