தமிழ் சினிமாவில் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் கதாநாயகனாகி வெற்றிப் பெற்று வருகிறார்கள். ஹரீஷ் கல்யாண், ஆரவ் போன்றவர்களின் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் ஷரீக் ஹஸன்.

இவர் ஏற்கெனவே ஜீ. வி. பிரகாஷ்குமார் நாயகனாக அறிமுகமான பென்சில் படத்தில் வில்லனாக நடித்தவர். ஆனால் பிக்பொஸ் நிகழ்வில் பங்குபற்றியதன் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது அட்டு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ரதன் லிங்கா என்பவர் இயக்கவிருக்கும் ‘உக்ரம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது குறித்து ஷரீக் ஹஸன் பேசுகையில்,

‘‘பென்சில் படத்திற்கு பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. அனைத்தும் வழக்கமான வில்லன் கதாப்பாத்திரங்கள் தான். அதனால் அதனை தவிர்த்தேன். இந்நிலையில் பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றினேன். அதன் பின்னர் எம்மைத் தேடி ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் இயக்குநர் ரதன் லிங்கா சார் சொன்ன கதையும், திரைக்கதையும் பிடித்திருந்ததால் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டேன்.” என்றார்.

ஷரீக் ஹஸன், பிரபல நட்சத்திர தம்பதி ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ்கான் தம்பதிகளின் வாரிசு என்பதும், இந்த படத்தில் ஷரீக் ஹஸனுக்கு ஜோடியாக நடிகை அர்ச்சனா ரவி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.