ஐரோப்பிய சந்தைகளுக்கு இத்தாலியின் Calzedonia S.p.A நாமத்தின் கீழ் உள்ளாடைகள் மற்றும் நீச்சல் ஆடைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதில் முன்னிலையில் திகழும் சிரியோ லிமிடெட், தனது சிறந்த நிதிப் பெறுபேறுகளுக்காக தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாக சிறந்த கூட்டாண்மை குடிமகன் நிலைபேறாண்மை விருதுகள் 2018 ஐ பெற்றுக் கொண்டது.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த வருடாந்த நிகழ்வு,தொடர்ச்சியான 15ஆவது தடவையாக நவம்பர் 26ஆம் திகதி இடம்பெற்றது. 

பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2002 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த சிரியோ லிமிடெட்,இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் ஏற்றுமதிக்கு 51 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை ‘Intimissimi’, ‘Tezenis’, மற்றும் ‘Calzedonia’ ஆகிய நாமங்களில் விற்பனை செய்யப்படும் ஆடை உற்பத்திகளினூடாக பங்களிப்பு செய்கிறது. 

நாட்டின் பொருளாதாரத்துக்கு வழங்கும் பங்களிப்புக்கு மேலாக தனது 2100க்கும் அதிகமான ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் நலனில் அதிகளவு அக்கறையையும் நிறுவனம் வெளிப்படுத்தி வருகிறது.

“செனெஹசரெலி” எனும் வருடாந்த சமூகப்பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது. 

இதனூடாக சிறுவர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு விஜயம் செய்து அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது,வருடாந்த

மருத்துவ முகாம்களை முன்னெடுத்து இலவச ஆய்வுகூட பரிசோதனைகளை வழங்குவது மற்றும் மேலேத்தேய மற்றும் சுதேச மருத்துவ பொருட்கள் தொடர்பான நிபுணத்துவ வைத்திய ஆலோசனைகளை வழங்குவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.

நிறுவனத்துக்கு அருகில் காணப்படும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசேட பயிற்சிப்பட்டறைகள் மற்றும்

கர்ப்பிணி தாய்மாருக்கு விசேட போஷாக்கு உணவு வேளைகள் போன்றவற்றை வழங்குகிறது.

நிறுவனத்தின் கூட்டாண்மை மூலோபாய திட்டத்தில் நிலைபேறாண்மை என்பது முக்கிய அங்கம் வகிக்கிறது. 

நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தன்வசம் கொண்டுள்ளதுடன் இவ்வாறு சுத்திகரிக்கப்படும் நீர்,தோட்டச் செய்கை மற்றும் கழுவுதல் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதியிடல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயன்முறைகளின் போது உயிரியல் ரீதியில் உக்கக்கூடிய மூலப்பொருட்களை பெருமளவில் பயன்படுத்துகிறது. 

சுய புத்தாக்கம் தொடர்பில் சிரியோ லிமிடெட் அதிகளவு கவனம் செலுத்துவதுடன்,இவ்வாறு வடிவமைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இதுவரையிலும் பயன்பாட்டில் உள்ளன.

சிரியோ லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான ஃபீல்க்ஸ் ஏ.பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “நிலைபேறாண்மை தொடர்பில் சிறந்த செயற்பாட்டாளர்களாக மீண்டும் ஒரு தடவை நாம் நிதிப்பெறுபேறுகள் மற்றும் வளர்ச் தொடர்பான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,எமது கூட்டாண்மை கொள்கையில் மூலோபாய அடிப்படையிலான கவனத்தை நாம் பெருமளவு செலுத்துகிறோம். 

எமது ஊழியர்களின் வளர்ச்சியில் மாத்திரம் நாம் தொடர்ச்சியான உதவிகளை வழங்காமல் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பங்களிப்பை வழங்குகிறோம்” என்றார்.

Calzedonia S.p.A இனால் பெண்கள் உள்ளாடைகள், ஸ்டொக்கிங்கள்,இரவு வேளை ஆடைகள்,காலுறைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. 

உள்நாட்டில் காணப்படும் ஏனைய நிறுவனங்களில்,ஒமெகா லைன் லிமிடெட்,பொல்கஹாவெல - அல்ஃபா அப்பரல்ஸ் லிமிடெட், பிங்கிரிய – பென்ஜி லிமிடெட் மற்றும் வவுனியா –வவுனியா அப்பரல்ஸ் போன்றன அடங்குகின்றன.இவற்றில் மொத்தமாக 12000க்கும் அதிகமான ஊழியர்கள்பணியாற்றுகின்றனர்.

Calzedonia S.p.A 4200க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை ஐரோப்பா,ரஷ்யா,மத்திய கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களின் 40க்கும் அதிகமான நாடுகளில் கொண்டுள்ளது. Intimissimi, Calzedonia, Tezenis மற்றும் Falconeri ஆகிய வர்த்தக நாமங்களிலமைந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.