(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஓரங்கட்டவில்லை. அவர் தான் கட்சியிலிருந்து விலகி செயற்படுகின்றார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

மேலும் சந்திரிகா பண்டாரநாயக தொடர்ந்தும் கட்சிசார் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை புறக்கணித்து வருகின்றார். அவர் குற்றஞ்சாட்டுவதைப்போன்று நாம் அவரை ஓரங்கட்டவில்லை. அதற்கான தேவையும் கட்சிக்கு இல்லை. தற்போது நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமையில் இவ்வாறான விடயங்கள் குறித்து குற்றஞ்சாட்டிக்கொண்டிருப்பது வீணான செயலாகும்.

கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி சம்மேளனத்திற்கு தொகுதி அமைப்பாளர்களுக்கு மாத்திரமே அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே தான் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.