- ராஜீவ் பாதியா

இலங்கையின் அரசியல் நெருக்கடியில் வெற்றியாளர் எவருமில்லை. நெருக்கடி உருவாக காரணமாயிருந்த நடவடிக்கைகளை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு நம்பிக்கை வாக்கெடுப்புகளில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவருமே பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

        

இந்த பின்புலத்திலே,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பிரதான அரசியல் பாத்திரங்கள் மத்தியில் இருக்கக்கூடிய எண்ணப்போக்குகள் எவை? முன்னாள் வெளியுறவு செயலாளரும் கலிங்க லங்கா பவுண்டேசனின் தலைவருமான லலித் மான்சிங் தலைமையிலான  மாண்புமிக்க இந்திய கல்விமான்கள், முன்னாள் சிவில் சேவை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதியொருவரை உள்ளடக்கிய தூதுக்குழு ஒன்று கடந்த மாதம் கொழும்பில் இருந்தது. இந்த தூதுக்குழு இலங்கையின் நான்கு முன்னணி ஆய்வு நிறுவனங்களுடனும் அரசியல் பிளவின் வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களுடனும் திறந்த மனதுடன் நேர்மையான முறையில் நடத்திய கலந்துரையாடல்கள் தற்போதைய நிலைவரம் பற்றிய தெளிவான பார்வையை தந்தன.

       

இந்ததியாவுடன் நேர்மறையானதொரு ஈடுபாட்டை வளர்த்துக்கொள்வதில் இலங்கைக்கு இருக்கின்ற தொடர்ச்சியான தேவை பற்றி கட்சிவேறுபாடுகள் கடந்த நிலையில் தெளிவான இருதரப்பு கருத்தொருமிப்பு தோன்றக்கூடியதாக இருந்தது. உறவுகளை மேம்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் சமச்சீரற்ற பருமனையும் வல்லமையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியாவினால் தாங்கள் அமுக்கப்படுவதாக இலங்கையர்கள் உணருகிறார்கள். அதன் காரணத்தினால் நெருக்கமான ஒத்துழைப்புக்கு இந்தியா விடுக்கின்ற அழைப்புக்களை எதிர்ப்பது இலங்கையின் சதந்திர அடையாளத்தை முனைப்புறுத்தும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக நோக்கப்படுவதாக இருக்கலாம்.

        

இலங்கையின் கருத்துக்கோணத்தில் நோக்கும்போது இந்தியாவுக்கு எதிரிடையானதாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவது என்பது ஒரு  தந்திரோபாயரீதியான அணுகுமுறையாகும். இலங்கைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்காக பாரியளவு மூலதனம் தேவைப்படுகிறது. கடுமையான நிபந்தனைகளுடன் கூடியதாக இருந்தாலும் கூட அந்த மூலதனத்தை வழங்க முன்வருகின்ற ஒரே நாடாக சீனா மாத்திரமே இருக்கிறது போலத் தோன்றுகிறது. பெருமளவு கடனுதவிகளை வழங்குவதன் மூலமாக இலங்கையை சீனா கடன்பொறியொன்றில் சிக்கவைத்திருக்கிறது என்ற கருத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகம்  சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டமை ஒரு நவகாலனித்துவ பாணிச் செயற்பாடு என்ற விமர்சனங்களையும் இலங்கையின் பல புத்திஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் நிராகரிக்கிறார்கள். சீனாவின் பணத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை சீனாவின் பிரசன்னத்தை ஆரத்தழுவத் தயாராயில்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். சீனாவை நன்கு புரிந்து விளங்கிக்கொண்டு கையாளுவதற்கான நிபுணத்துவம் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் பெருமை பேசுவதை நம்பக்கூடியதாக இல்லை.

       

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டாபோட்டி என்று வரும்போது அந்த இரு ஆசிய வல்லாதிக்க நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் ஒரு சமநிலையைப் பேணவேண்டும் என்ற அபிப்பிராயம் ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கு இருக்கிறது.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கலான உறவுகள் என்ற குறுகிய நிறப்பிரிகையின் ஊடாக பார்க்கக்கூடாது என்று வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. அது யதார்த்தபூர்வமற்றது என்றபோதிலும் வலுவானதாக இருக்கிறது. இதற்கு அவர்கள் இரு மேலதிக வாதங்களை முன்வைக்கிறார்கள். பெரும்பாலான திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை முதலில் இந்தியாவையே அணுகியது. இந்தியா தயக்கம் காட்டிய பின்னரே சீனாவின் உதவி நாடப்பட்டது என்பது ஒரு வாதம். சீனா திட்டங்களை பொறுப்பெடுத்தால் துரிதமாக அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டும். ஆனால், இந்திய உயரதிகாரிகள் மட்டத்தில் எப்போதுமே தாமதம் காட்டப்படும் என்பது இரண்டாவது வாதம். இந்த வாதம் இலங்கையின் ஒரு பல்லவியாக இருந்து வருகிறது.

       

தெற்காசிய நாடு என்ற அடையாளத்தில் இருந்து தூரவிலகி இந்து சமுத்திர நாடு என்ற பாத்திரத்தை வகிப்பதிலேயே இலங்கை இப்போது முனைப்புக்காட்டுகிறது போலத்தெரிகிறது. தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்துடனும் (ஆசியான்) ஜப்பானுடனும் கூடுதலான அளவுக்கு தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற நாட்டம் இதற்கு காரணமாக இருக்கக்கூடும். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலை தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தியும் ' பிம்ஸ்ரெக் ' என்று அழைக்கப்படுகின்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி என்ற அமைப்பை வலுப்படுத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்களும் இலங்கையின் இந்த நகர்வின் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்களாக இருக்கலாம். சிறந்த சர்வதேச கடல்சார் தொடர்புகளின் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார வாய்ப்புகளும் கடல் வளங்களை பெருமளவுக்குப் பயன்படுத்துகின்ற ஆற்றலைக்கொண்ட நாடாக மாறுவதில் உள்ள சாத்தியமும் இது விடயத்தில் மேலதிக நோக்கங்களாக இருக்கலாம்.

         

இந்து சமுத்திரத்தைப் பொறுத்தவரை, அமைதியும் சமாதானமும்  நிலவுகின்ற பிராந்தியமாக அதை மாற்றுவதற்கான தனது முயற்சிகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெறுவதில் இலங்கை ஆர்வம் காட்டுகிறது. இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு ஆதரவாக சிலர் கருத்து வெளியிட்டார்கள். பிராந்தியத்தின் நன்மைகளுக்காக சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்துச் செயற்படவேண்டும் என்று வேறு சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

பொருளாதாரப் பிரச்சினைகள்

       

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு என்று வரும்போது ஜனாதிபதி சிறிசேனவையும் ராஜபக்சவையும் விட விக்கிரமசிங்க கூடுதலான அளவுக்கு உற்சாகத்துடன் செயற்பட்டுவந்திருக்கிறார். 2017 ஏப்ரிலில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட செயற்திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டுமென்று விக்கிரமசிங்க வலியுறுத்தியமையும் தற்போதைய அரசியல் நெருக்கடி தோன்றுவதற்கான உடனடிக்காரணங்களில் ஒன்று. அந்தச் செயற்திட்டங்களை சிறிசேன எதிர்த்தார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது விக்கிரமசிங்க இந்தியா சம்பந்தப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படுகின்ற தாமதங்கள் குறித்து பிரதமர் மோடி விசனம் வெளியிட்டவேளையில்  அதற்கு காரணம் ஜனாதிபதி சிறிசேனவே என்று அர்த்தப்படக்கூடியதாக பதிலளித்தார். இது மேலும் தன்னைக்கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற சதி முயற்சிகள் குறித்து கரிசனை காட்டுவதற்கு விக்கிரமசிங்க மறுத்ததனால் சிறிசேனவுக்கு ஏற்பட்ட கவலையும் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை உச்சநிலைக்கு கொண்டுவந்தது.

    

இந்தியப் பொருட்கள் இலங்கைச் சந்தையில் குவிக்கப்படக்கூடும் என்றும் இந்திய தொழில்சார் நிபுணர்கள் படையெடுக்கக்கூடும் என்றும் இலங்கை கைத்தொழில்துறையினர் கொண்டிருக்கின்ற அச்சம் குறித்தும் கலிங்க லங்கா பவுண்டேசன் தூதுக்குழுவுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டிலேயே முதலீடுகளைச் செய்யவிரும்புகிறார்களா என்பதே கொழும்பில் உள்ள மதிப்பீடாக இருக்கிறது. அதனாலேயே தென்கிழக்காசியாவில் இருந்தும் அதற்கு அப்பால் இருந்தும் புதிய முதலீடுகளைக் கவருவதற்கு இலங்கையில் நாட்டம் காட்டப்படுகிறது. ஆனால், சகல முதலீட்டாளர்களுமே இலங்கையில் உறுதிப்பாடு குழம்பிப்போய் அரசியல் ரீதியில் நாடு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் முதலீடுகளைச் செய்யத்தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இலங்கைத் தமிழர்களின் அபிப்பிராயம் இந்தியா இலங்கையுடனான விவகாரங்களில் தன்முனைப்புடனான கொள்கையைக் கடைப்பிடித்துச்  செயற்படவேண்டும் என்று வலியுறுத்துவதாகவே இருக்கிறது.

     

ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில் இலங்கையில் இந்தியா பல்வேறு பிரதிபலிப்புகளை எதிர்நோக்குகிறது ; அதாவது வரவேற்பு, ஆதரவு, சந்தேகம் மற்றும் எதிர்ப்பு என்று அந்த பிரதிபலிப்புக்களை வரிசைப்படுத்தலாம். இந்திய இராஜதந்திரம் இக்கட்டான ஒரு நிலையை எதிர்நோக்குகிறது. அயல்நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதில் புதுடில்லி பற்றுறுதி கொண்டிருக்கிறது, ஆனால், அது எப்போதுமே தனது முக்கியமான நலன்களைப் பாதுகாக்கும். சகல தரப்புகளுக்கும் நியாயமாக நடந்துகொள்கின்ற அதேவேளை, விரிவடையும் நெருக்கடியை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

 ( ராஜீவ் பாதியா மியன்மாருக்கான முன்னாள் இந்தியத் தூதுவரும் கேட்வே ஹவுஸ் என்ற கொள்கை ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினருமாவார் )

( இந்து)