(இராஜதுரை ஹஷான்) 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவாக கொண்டுவரப்பட்ட ஒரு  திருத்தம். பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் அரசியலில்  பிரவேசிக்க கூடாது என்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி தொடர்ந்து  பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற  காரணத்திற்காகவும் மிகவும் சூட்சமமான முறையில்  நிறைவேற்றப்பட்டுள்ளது என பாராளுமன்ற  உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

19 ஆவது அரசியலமைப்பினை ஐக்கிய தேசிய  கட்சியினர் தமக்கு  சாதகமாக இயற்றி தொடர்ந்து  பாராளுமன்றத்தில் அதிகாரம் செலுத்தி நிறைவேற்று அதிகாரத்தை  பலவீனப்படுத்த  உருவாக்கினர். இதன்  காரணமாக ஏற்பட்ட  வாதப்பிரதிவாதங்களின்   பிரதிபலிப்பே இன்னைய அரசியல் நெருக்கடி அரசியலமைப்பிற்கு  பொருள்கோடல் செய்வதால் தொடர்ந்த நெருக்கடி நிலைமை தொடர்ந்த வண்ணமே காணப்படும் இதற்கு  பொதுத்தேர்தல்  ஊடாகவே  தீர்வு காண முடியும் என்றார்.