கிளிநொச்சியில் கடந்த சில நாட்களாக நிலவிய மழையுடனான காலநிலையால் 34 ஹெக்ரேயர் நெற்செய்கை அழிவடைந்திருப்பதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பி.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலையால் பலவேறு இடங்களிலும் விவசாயச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிய மழையுடனான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் தொடர்புகொண்டு கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்திலே காலபோக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.

இதில் பெரிய மற்றும் நடுத்தரக்குளங்களின் கீழ் பன்னிரண்டாயிரத்து 255 ஹெக்ரேயர் நிலப்பரப்பிலும் சிறிய நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 544 ஹெக்ரேயர்  நிலப்பரப்பிலும், அதேபோல மானாவாரியாக 11 ஆயிரத்து 696 ஹெக்ரேயரிலும் என மொத்தமாக 26 ஆயிரத்து 495 ஹெக்ரேயர்  நிலப்பரப்பில் இம்முறை காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படடிருக்கின்றது.

அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக 34 ஹெக்ரேயர்  பயிர்செய்கை முழுமையாகவும் 72 ஹெக்ரேயர்  பயிர்செய்கைகள் 70 வீதமான அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக எமது திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.

இதேவேளை மழையுடனான காலநிலையால் கபிலநிறத்தத்தி மற்றும் எரிபந்தம், ஆகிய நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டன.

இவை இனங்காணப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு நோய்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படடிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.