இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவரிடமும்  ஊடக அமைச்சின் செயலாளரிடமும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பான விதத்தில் செயற்படுவது குறித்த தனது கவலையை சபாநாயகர் கருஜெயசூரிய இன்று வெளியிட்டுள்ளார்.

அரச ஊடகங்கள் பக்கச்சார்பான முறையில் செயற்படுகின்றன என பாராளுமன்றத்தில் கரிசனை வெளியிடப்பட்டதை தொடர்ந்தே சபாநாயகர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுதாபனத்தின் தலைவர் சோமாரட்ண திசநாயக்க ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோரை  அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

பாராளுமன்ற அமர்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்வது ஏன் இடைநிறுத்தப்பட்டது என்பதை அறிவதற்காகவே சபாநாயகர் இரு அதிகாரிகளையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என  சபாநாயகர் அலுவலகம் தெரிவி;த்துள்ளது.

நாடு நெருக்கடியான சூழலில் உள்ள நிலையில்  ஊடக நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டியதன் அவசியத்தை சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம்,இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபனம்,ஐடின் மற்றும் ஏஎன்சில் பத்திரிகைகள் போன்றவற்றின் நடவடிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சபாநாயகருடனான இன்றைய சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள ஊடக அமைச்சி;ன் செயலாளர் இந்த விடயங்கள் குறித்து உடனடி கவனம் செலுத்துவதாகவும் அரச ஊடகங்களிற்கு அறிவுறுத்தலொன்றை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற அமர்வுகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமை குறித்து இலங்கை ஓலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கவலை வெளியிட்டுள்ளதுடன் நிலைமை கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என தெரிவித்துள்ளார்.