ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக  நியமிக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் அதேவேளை, பிரதமராக அவரையே நியமிக்கவேண்டுமென்ற நிலைப்பாட்டில்  விட்டுக்கொடுப்பைச் செய்ய ஐக்கிய தேசிய முன்னணி தயாராக இல்லாத நிலையில் இலங்கையின் அரசியல் நெருக்கடி விரைவாக முடிவுக்கு வரக்கூடிய சாத்தியப்பாடு இல்லை என்பதே  அரசியல் அவதானிகளின் பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.

       

பாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்துவரும் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய சூழ்நிலையைத் தோற்றுவிக்காமல் போகக்கூடும் என்று நம்பிக்கையீனமும் அரசியல் வட்டாரங்களில் வெளிப்படுத்தப்படுகிறது.

       

பாராளுமன்றத்தின்  225 உறுப்பினர்களும் ஆதரித்தால் கூட விக்கிரமசிங்கவை இனிமேல் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்று அவர் மீதான வன்மத்தை பல தடவைகள் ஜனாதிபதி வெளிக்காட்டியிருக்கிறார். நேற்றைய தினம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 வருடாந்த மகாநாட்டில் உரையாற்றிய வேளையிலும் அதை அவர் சொன்னார். ஆனால், தங்கள் தரப்பில் வேறு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் பிரதமராக முன்மொழியப்போவதில்லை என்று ஐக்கிய தேசிய முன்னணி வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறது.

      

இத்தகைய சூழ்நிலையில்  இரு தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு மத்தியஸ்தரினால் மாத்திரமே முட்டுக்கட்டை நிலையை தளர்த்தக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், அவ்வாறு மத்தியஸ்த முயற்சிக்கு யாரும் முன்வருவதாக இல்லை. நான்கு பௌத்த உயர்  பீடங்களினதும் மகாநாயக்கர்கள் மத்தியஸ்தத்துக்கு பொருத்தமானவர்களாக நோக்கப்படுகின்ற போதிலும், அவர்கள் அதற்கு தயக்கம் காட்டுவதாகத் தோன்றுகிறது. இன்றைய அரசியல் நெருக்கடியில்  மகாநாயக்கர்கள் தங்களுக்குள் முரண்பாடான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

        

உச்சநீதிமன்றம் பாராளுமன்றத்தை கடந்த மாத முற்பகுதியில் கலைத்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு இசைவானதே என்று தீர்ப்பை வழங்குமேயானால், அடுத்து நடைபெறக்கூடிய பொதுத்தேர்தல் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என்று நம்பலாம். ஆனால், பாராளுமன்றக் கலைப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வருமேயானால், அரசியல் களம் மேலும்  நெருக்கடிமிக்கதாக மாறும் ஆபத்து இருக்கிறது.

         

இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக நாடு பிரதமரும் அமைச்சரவையும் இல்லாததாக விசித்திரமானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவரது அமைச்சரவையும் செயற்படமுடியாதவாறு இடைக்காலத்தடை விதித்ததை அடுத்து அவர்கள் தங்களது அலுவலகங்களுக்கு செல்வதை நிறுத்தியிருக்கிறார்கள். அரசாங்கத்தின் சகல செயற்பாடுகளும் அமைச்சுக்களின் செயலாளர்களின் உதவியுடன் ஜனாதிபதியினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இலங்கையில் முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை.

         

சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் பாராளுமன்ற அமர்வுகளை தொடர்ச்சியாக பகிஸ்கரிப்பதும் முதற்தடவையாக இப்போதுதான் இடம்பெறுகிறது. ஜனாதிபதி சிறிசேனவினால் முறைப்படியாக சட்டபூர்வமாக ராஜபக்ச அரசாங்கம் நியமிக்கப்பட்டபோதிலும் அதை அங்கீகரிக்க மறுத்ததன் மூலம் சபாநாயகர் கரு ஜெயசூரிய அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டியே அரசாங்கக் கட்சிகள் சபையைப் பகிஸ்கரிக்கின்றன." சபாநாயகர்  எங்களை அங்கீகரிக்கவில்லை என்றால், அவரை நாங்களும் அங்கீகரிக்கமாட்டோம்' என்று அரசாங்கத் தரப்பினர் கூறுகிறார்கள்.

        

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் பாராளுமன்றக் கலைப்பு தொடர்பில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தம் செய்து உத்தரவு பிறப்பித்த பிறகு பாராளுமன்றம் கூடிய ஆரம்ப நாட்களில் சபைக்குள் அமளிதுமளிகளில் ஈடுபட்ட அரசாங்கத்தரப்பினர் அதற்குப் பிறகு சபை அமர்வுகளில் பங்கேற்காமல் இருந்துவருகிறார்கள். அரசாங்கம் பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது உலகில் வேறு எங்காவது முன்னர் நடந்திருப்பதற்கான உதாரணம் இல்லை என்றே கூறப்படுகிறது.

(வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுக்களம்)