(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைக்கு காரணம் 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தமேயாகும். இதற்கு வாக்களித்ததை எண்ணி நாம் கவலையடைகின்றோம். 19 ஆம் சீர்திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களினால் பொது மக்களின் வாக்குரிமை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளது என   பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

விரைவில் தேர்தலுக்கு செல்வதோடு மீளவும் 19 ஆம் அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதே அரசியல் நெருக்கடிக்கான சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவித்தார். 

நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொது ஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்திற்கு ஆதரவாக நாமும் வாக்களித்துள்ளோம். அதனை நினைத்து தற்போது கவலையடைகின்றோம். இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதகமான மாற்றங்களின் காரணமாக இன்று பொது மக்களே பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். 

19 ஆம் சீர்திருத்தின் மூலம் மக்களின் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே நாம் வாக்களித்தோம். ஆனால் அது தற்போது கேள்விக்குறியாகியாக்கப்பட்டுள்ளது. மக்களின் வாக்குரிமை மீறப்பட்டுள்ளது. எனவே 19 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் மீளவும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் காரணமாகவே நாடு ஸ்திரமற்று போயுள்ளது என்றார்.