உடல் அமைப்புக்கு நிகரான ஒரு இயந்திரம் இதுவரை வடிவமைக்கப்படவில்லை; வடிவமைக்கப்படப்போவதும் இல்லை. இயற்கையோடு இயைந்தே வாழ்க்கை நடத்தியதால் நம் முன்னோர்களின் உடலில் நோய்களும் குறைவாகவே இருந்தன. நாட்பட, நாட்பட மனிதன் தன் வசதிக்காக என்ற பெயரில் உருவாக்கியவையே இன்றைய மனுக்குலத்தின் பெரும்பாலான நோய்களுக்கும் மூல காரணம். அவற்றுள் முக்கியமானது மூட்டுக்களுடன் தொடர்புடைய நோய்கள். பண்டைத் தமிழர்களது வாழ்க்கை முறையை நன்கு கவனித்தால், அவர்களது தினசரி செயற்பாடுகள் அனைத்தும் அவர்களை ஆரோக்கியமாக முக்கியமாக, மூட்டுப் பிரச்சினைகள் ஏதுமின்றி வாழ்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்த வாழ்க்கை மாற்றமே இன்றைய மூட்டுப் பிரச்சினைகளின் பிரதான காரணம்” என்கிறார் டொக்டர் சுப்ரமணியம். மதுரை, வேலம்மாள் சிறப்பு மருத்துவமனையின் ருமட்டோலஜி துறையின் மூத்த மருத்துவர்.

“ருமட்டோலஜி என்பது தமிழில் முடக்குவாதவியல் எனப்படும். இதில் எலும்பு, தசை சார்ந்த நோய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் எளிதாகச் சொல்வதானால், வாத நீருடன் தொடர்புடைய அனைத்து நோய்களையும் சரிசெய்யும் துறை என்று இதைச் சொல்லலாம்.

“மூட்டு வலி பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால், மூட்டு தொடர்பான நோய்களில் 200க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. அவற்றுள் மூட்டு வலியுடன் கூடிய ருமட்டோலஜி வியாதிகளும், மூட்டு வலியில்லாத ருமட்டோலஜி வியாதிகளும் வர வாய்ப்புள்ளது. “ருமட்டோலஜி நோய்களை ‘ருமட்டோய்ட் ஆர்த்திரைட்டிஸ்’ என அழைப்பர். இது குறித்த அதிக விழிப்புணர்வு இல்லாததினால், மக்கள் வலிக்கான மாத்திரைகளை அவ்வப்போது எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், எதிர்ப்பு சக்தியின் பிரச்சினையினால் தான் ருமட்டோலஜி தொடர்பாக நோய்கள் ஏற்படுகின்றன.

“நம்முடைய உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியானது நம்மை பற்பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால், இந்த எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராகத் திரும்பி செயற்படுவதால் தான் இந்த நோய் நம்மை தாக்குகிறது. இதை ‘ஒட்டோ இம்யூன்’ நோய் என அழைப்போம். இந்த நோய் தலையிலிருந்து பாதம் வரை எந்த உறுப்பையும் எந்த நேரத்திலும் தாக்கலாம்.

“இந்த உடலைக் காப்பதற்காகத் தான் நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அமைந்திருக்கிறது. ஆகையால் இந்த நோய் பிறவியிலேயோ அல்லது மரபணு காரணமாகவோ ஏற்படுவதில்லை.

வயது வித்தியாசமின்றி அனைவரையும் ருமட்டோய்ட் நோய்கள் பீடிக்கும் என்றாலும், பெரும்பாலும் 15 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களையே அதிகம் பாதிக்கிறது.

“புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள், மன அழுத்தம் அதிகம் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்ப்பு சக்தியானது பாதுகாக்காமல், அவர்களது உடற் செயற்பாட்டுக்கு எதிராகவே செயற்படத் தொடங்குகிறது. இதனால், உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதோடு, ருமட்டோய்ட் நோய்களையும் வரவழைக்கிறது.

“ருமட்டோய்ட் பிரச்சினைகளைக் கண்டறிவதற்கு சில அறிகுறிகளைக் கவனித்தால் போதும். வழக்கமாக மூட்டு வலி, மூட்டு வீக்கம் இருக்கும், அடிக்கடி ஜுரம் ஏற்படும், இரவில் வேலை முடித்துவிட்டு படுக்கைக்கு சென்றால், காலை எழுந்திருக்கும் போது சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால், ரூமட்டாய்டு இருப்பவர்களுக்கு இரவில் படுக்கைக்கு செல்லும் போது இருக்கும் வலியை விட காலை எழுந்திருக்கும் போது தான் வலி அதிகமாக இருக்கும். சிலருக்கு தோல் வியாதியும் உடன் வரும்.

“இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், ருமட்டோய்ட் நோய் அதிகமாகப் பெண்களையே தாக்குகின்றன. இதில் ருமட்டோய்ட் ஆர்த்ரைட்டிஸ் என்பது மிகவும் பொதுவானது. மேலும் ‘சொரியாசிஸ்’ எனப்படும் சரும நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் பக்க விளைவாக, ‘சொரியாட்டிக் ஆர்த்ரைட்டிஸ்’ என்னும் நோய் ஏற்படுகிறது. ருமட்டோய்ட் போன்றே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியின் எதிர்மறை தாக்குதலினால்தான் சொரியாசிஸ் நோயும் ஏற்படுகிறது. இதனால் சொரியாசிஸ் உள்ளவர்களுக்கு தலை முடி உதிர்வு, நகங்களில் சக்தியிழப்பு, முதுகு மற்றும் குடலில் நீர் மற்றும் வயிற்று போக்கு ஏற்படும். இதனால் உடலில் சக்தியிழந்து அது ரூமட்டாய்டு நோய்க்கு வழி வகுக்கிறது.

“முதுகில் வாத நீர் ஏற்படுவர்களுக்கு ‘எங்கிலோசிங் ஸ்பொன்ட்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis) என்னும் ஒருவகையான நோய் ஏற்படும்.

“மருத்துவத் துறையில் மூட்டு தொடர்பான சிகிச்சைக்கு ரூமட்டாய்டு மருத்துவர்களை விட ஆர்த்தோ மருத்துவர்களே அதிகம் இருக்கிறார்கள். மேலும், மூட்டில் அடியோ அல்லது காயங்களோ அல்லது ஒரு மூட்டில் மட்டும் வீக்கம் இருந்தாலோ ஆர்த்தோ மருத்துவர்களிடம் செல்வதே சிறந்தது. ஆனால், பல்வேறு மூட்டுக்கள் மற்றும், தசைகளில் வலிகள் ஏற்பட்டால் அவர்கள் ருமட்டோலஜிஸ்டிடம் ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், அவர்களால் தான் சிறந்த நிவாரணத்தையும், முழுமையான குணத்தையும் அளிக்க இயலும்.

“நோயெதிர்ப்புச் சக்தி குளறுபடிகளால் உண்டாவதால், ருமட்டோய்ட் நோய்களுக்கு சத்திர சிகிச்சைகள் எதுவும் செய்வதில்லை. மருந்துகள் மூலமே குணப்படுத்த முடியும். மருந்துகள் மட்டுமன்றி, மருத்துவர்கள் சொல்லும் வாழ்க்கை முறையையும், உடற்பயிற்சியையும் பின்பற்றி வந்தால் ருமட்டோய்ட் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். ஏற்கனவே ருமட்டோய்ட் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள், 0091 8754139210 தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டால் போதுமான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.”