(நா.தனுஜா)

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக குறித்தவொரு கட்சி உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளன. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பிற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும் வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பிரதமராக செயற்படுவதற்கும், அவர் தலைமையிலான அமைச்சரவை அமைச்சர்களின் செயற்பாடுகளுக்கும் இடைக்காலத்தடை விதித்து நேற்று  மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் மஹிந்த தரப்பினர் இத்தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பிலேயே சாலிய பீரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், 

கடந்த சில வாரங்களாக நீதித்துறை சுதந்திரமாகவும், தீர்க்கமாகவும் செயற்படுவதனை அவதானிக்க முடிகின்றது. உயர்நீதிமன்றம், மேல்நீதிமன்றம் போன்றவை மாத்திரமன்றி பொதுமக்கள் சார்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளிலும் நீதிவான் நீதிமன்றங்கள் உட்பட அனைத்தும் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றன. இந்நிலையானது சட்டத்தின் ஆட்சி மற்றும் சுயாதீன நீதித்துறை என்பவற்றுக்கு மதிப்பளிக்கும் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க விடயமாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.