இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்களுக்கான பிரசாரங்கள் கடுமையாகச் சூடுபிடித்திருக்கின்றன. கடந்த பல வருடங்களாக இந்திய அரசியலில் மதங்களைப் பயன்படுத்தும் போக்கு தீவிரமடைந்துவந்திருக்கிறது. அந்தப்போக்கு தற்போதைய பிரசாரங்களில் மிகவும் கேலிக்குரிய வகையில் மாறியிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அனுமாரை ஒரு தலித் என்று கூறுவதன் மூலம் தலித் மக்களின் வாக்குகளைப் பெறமுடியுமென்று அரசியல்வாதிகள் நம்புகின்ற அளவுக்கு கீழ்த்தரமானதாக நிலைவரம் மாறியிருக்கிறது.

இந்த துரதிர்ஷ்டவசமான நிலைவரம் குறித்து டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை திங்கட்கிழமை " அரசியலில் ஏன் மதம்? " என்ற மகுடத்தில் ஆசிரிய தலையங்கத்தைத் தீட்டியிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது ;

2019 பொதுத்தேர்தலுக்கு முன்னரான ' அரையிறுதி ' ஆட்டம் போன்று கருதப்படுகின்ற சில மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அரசியல் தந்திரோபாயமாக மதங்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்ற போக்கு அதிகரித்திருக்கிறது. மதங்களையும் இதிகாசங்களையும் பயன்படுத்தி அரசியல்வாதிகள் தேர்தல் கூட்டங்களில் முன்வைக்கின்ற  வாதங்கள் சாதாரண மக்களுக்கு விசித்திரமானவையாகத் தோன்றினாலும் அவை குறித்து விமர்சிக்காமலல் இருக்கவும் முடியவில்லை.

      

அனுமானின் கோத்திரம், சாதி பற்றியெல்லாம் அரசியல்வாதிகள் பேசுகிறார்கள். உத்தரப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இந்தியாவில் அதிகப்பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற இந்து மதத்தை அரசியலுக்கு பயன்படுத்துவதில் மிகவும் கைதேர்ந்தவர். அவர் இராமாயணத்தில் இருந்து இராமரையும் வேறு காவிய நாயகர்களையும் பற்றி மேடைகளில் தீவிரமாகப் பேசுகிறார். அனுமான் ஒரு தலித்தா இல்லையா என்று ( இராமபிரான் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்ற யுகத்துக்குப் பிறகு ஆயிரமாயிரம் வருடங்கள் கடந்துசென்றுவிட்ட ) இன்றைய நவீன யுகத்தில் வாக்குவாதங்கள் இடம்பெறுவதைக் காணும்போது சிரிக்காமல் வேறு என்ன செய்வது? 2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு பெருமளவுக்கு சார்பாக இருந்த தலித் மக்களின் வாக்குகளை தொடர்ந்தும் தங்களுக்கு ஆதரவாக வைத்திருப்பதற்கான ஒரு முயற்சியாக ஆதித்யநாத் இவ்வாறு அனுமானின் கோத்திரம் பற்றி பேசியிருக்கக்கூடும்.

      

மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மதங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது தொடர்பான தேர்தல் சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை முறையாக நடைமுறைப்படுத்தினால் அதிகப்பெரும்பான்மையான அரசியல்வாதிகளை தேர்தல்களில் இருந்து ஒதுக்கிவைக்கவேண்டும். உதாரணமாக,  பகவத் கீதையில் வருகின்ற பெயரைக்கொண்டவரான பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்து சமயத்தைப் பற்றி எந்தளவுக்கு அறிவிருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியிருக்கிறார். இதற்கு பதிலடியாக ராகுல் தனனைப் பிராமணர் என்று உரிமைகோருவதையும் அவர் கோவில்களுக்கு சென்று வழிபடுவதையும் பாரதிய ஜனதா கட்சி நையாண்டி செய்கிறது.

         

அரசியல் விவாதங்கள் இந்தளவுக்கு தரந்தாழ்ந்து போயிருப்பது மிகவும் வேதனை தருகிறது. அரசியல் பிரசாரங்களில் மதங்களையும் கடவுளர்களையும் பயன்படுத்த மல்லுக்கட்டுவதும் இதிகாசங்களில் வருகின்ற பாத்திரங்களின் சாதி பற்றப் பேசுவதும் இந்தியாவை நேர்மறையான திசையில் கொண்டுசெல்லுமா? அனுமானின் குலம், கோத்திரம், சாதி பற்றியெல்லாம் பேசுவது இன்று யாருக்குப் பயன்தரப்போகிறது?