சர்வதேச நிதித்துறையில் உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு அவசியமான கொள்கைகளை ஆராயும் நோக்குடன் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட 20 நாடுகள் குழு என்ற ( ஜி- 20) அமைப்பின் வருடாந்த உச்சிமகாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும்  தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் தலைநகர் புவனஸ் அயர்ஸில் நடைபெற்றது.  

உலகளாவிய  வர்த்தக சீர்குலைவுநிலையொன்று ஏற்படுவதைத் தடுக்கக்கூடிய அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்பட்டமையை இந்த மகாநாட்டின் முக்கியமான உடனடி விளைபயன் என்று கூறமுடியும்.இதன் விளைவாக உலகளாவிய பொருளாதாரச் சீர்குலைவும் தற்போதைக்கு தவிர்க்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் தோன்றியிருக்கின்றன. யதார்த்தநிலையை கணிசமானளவுக்கு உணர்ந்தவர்களாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கும் வெளிக்காட்டிய நல்லெண்ணமே இதற்கு காரணம் என்று சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் 20,000 கோடி டொலர்கள் பெறுமதியான பொருட்களுக்கு 10 சதவீதம் தொடக்கம் 25 சதவீதம் வரை வரியை அதிகரிக்கப்போவதாக இதுவரை அச்சுறுத்திக்கொண்டிருந்த ட்ரம்ப், அவ்வாறு வரி விதிப்பைச் செய்யாதிருக்க ஆர்ஜன்டீனா மகாநாட்டில் இணங்கிக்கொண்டார்.அதற்கு பிரதியுபகாரமாக சீன ஜனாதிபதி அமெரிக்காவில் இருந்து செய்யப்படும் கொள்வனவுகளை விரிவுபடுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.வர்த்தக வாய்ப்புகளுடன் தொடர்புடைய விவகாரங்களில் பரந்தளவிலானதும் ஆழமானதுமான புரிந்துணர்வை எட்டுவதற்கு இரு நாடுகளும் பரஸ்பரம் மூன்று மாதகால அவகாசத்தையும் வழங்கியிருக்கின்றன.

சர்ச்சைக்குரிய வர்த்தக விவகாரங்களில் கடந்த இரு வருடங்களாக அமெரிக்க அதிகாரிகளும் சீன அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்திருக்கின்ற போதிலும், உகந்த இணக்கப்பாடொன்றை எட்டமுடியாமல் இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் இந்த மூன்று மாதகால அவகாசம் என்பது வர்த்தகத் தகராறை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் அறிவிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறதே தவிர, அதற்குள் வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை என்று அவதானிகள் பலரும் கூறுகிறார்கள்.என்றாலும் புவனஸ் அயர்ஸில் காணப்பட்ட உடனடிப் புரிந்துணர்வின் ஒரு விளைவான பகைமைத் தணிவு பெரிதும் வரவேற்கப்படவேண்டியதே. அது செயன்முறைகளுக்கு உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

உலகின் மிகப்பெரிய இரு பொருளாதாரங்களுக்கு இடையில் முழு அளவில் வர்த்தகப்போர் மூளுமாக இருந்தால் அது உலகளாவிய வர்த்தகம் மற்றும் சர்வதேச பொருளாதாரங்களுக்கு பாரதூரமான பாதிப்புக்களைக் கொண்டுவரும்.வெளிப்படையான மோதல் இரு தரப்பிலும் பொருளாதார பலாபலன்களைக் குறைத்துவிடக்கூடியதும் சாத்தியம்.அமெரிக்காவை காட்டிலும் சீனாவுக்கே பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்காவினதும் சீனாவினதும் பொருளாதாரங்களின் வலிமை குன்றினால் உலக வர்த்தகத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.ஏனென்றால், இவ்விரு நாடுகளுக்கும் ஏனைய நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறுகின்ற சேவைகளும் பொருட்களின் விற்பனையும் குறைந்துபோதற்கு அது வழிவகுக்கும்.இதன் விளைவாக உலக பொருளாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.ஆனால், புவனஸ் அயர்ஸில் ட்ரம்புக்கும் சி ஜின்பிங்கிற்கும் இடையே காணப்பட்ட இணக்கப்பாடு உலக வர்த்தக மற்றும் நிதித்துறை ஒழுங்கு முறைமைகளை சிறிதேனும் நெருக்கடியில் இருந்து தற்போதைக்கு காப்பாற்றும் என்று நம்பலாம்.

( வீரகேசரி இணையத்தள வெளியுலக அரசியல் ஆய்வுக்களம்)