- வீ.பிரியதர்சன் 

இலங்கையில் இன்று எற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியையடுத்து நாட்டு மக்களினதும் குறிப்பாக சர்வதேச நாடுகள் மத்தியிலும் இலங்கையில் ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்விகள் மறைமுகமாக எழும்பத்தான் செய்கின்றன.

இலங்கையின் வரலாற்றில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற செயல்கள் குறிப்பாக வடகிழக்கில் இடம்பெற்ற யுத்தம், இன அழிப்பு மற்றும் அவர்களுக்கு எதிராக தொடர்ந்தும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் அடக்குமுறைகள். அதைவிட இலங்கையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் எல்லாம் இலங்கையின்  ஜனநாயகத்திற்கு பெரும் கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்ற நிலையில், தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெறும் அடாவடிகள் இலங்கை ஒரு ஜனநாயக நாடா என்ற கேள்விக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளது.

நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதாக பல்வேறு இடங்களில் பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு வகையான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்குமிடையில் பல்வேறு தரப்பட்ட சந்திப்புக்கள் இடம்பெற்ற வண்ணமேயுள்ளன. ஆனால் எவ்வித மாற்றங்களும் இடம்பெற்றதாக தெரியவில்லை.

தனித்தனியான சந்திப்புகளினால் எவ்வித மாற்றங்களும் இடம்பெறப்போவதில்லையென்பது தற்போது நிதர்சனமாகியுள்ள நிலையிலும் இது காலத்தைக்கடத்தும் செயற்பாடாகவே மக்களாலும் உலக நாடுகளாலும் பார்க்கப்படுகின்றது.

ஒவ்வொரு சந்திப்புக்களிலும் ஒவ்வொரு அரசியல் குழுவோ அல்லது அரசியல் தலைவர்களுடனும் ஒவ்வொரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றதை நாம் செய்திகள் வாயிலாக பார்க்கின்றோம். அதைவிடுத்து நாட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அதிகாரத்திலிருப்பவர்கள் சந்திப்புக்களை ஏற்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் ஒன்றிணைத்து ஒரு தடவையில் ஒரு கருத்தைப்பேசி தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வைக் காண்பது சாலச்சிறந்ததென்பது மக்களின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு நாட்டின் அரசியல் நெருக்கடி நீண்டு செல்லுமாக இருந்தால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்க வழிகோலும் என்பதுடன் நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தம் மறுவடிவமெடுத்து அது நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை உருவாக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

நாளுக்குநாள் இலங்கை ரூபாவின் பெறுமதி உலக சந்தையில் வீழ்ச்சியடைந்து செல்வதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியென்பன கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. அடுத்துவரும் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. மறுபக்கம் நாட்டின் எதிர்கால இளம் சந்ததிகள் மற்றும் சிறார்களின் எதிர்காலநிலை கேள்விக்குட்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்டு தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட அனைவரும் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடிக்கு கணக்குக்கொடுக்க வேண்டியவர்களாகின்ற நிலையில், இன்னும் நாட்களைக் கடத்திச்செல்லாது பதவிப்பிரமாணங்களின் போது பெற்றுக்கொண்ட சத்தியத்தினை நினைவுபடுத்தி நாட்டை சரிவில் இருந்து மீட்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் !.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் போது , மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை, பிரதி அமைச்சர்களை அவர்கள் வகித்த பதவியில் இருந்து இடைநீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதேவேளை , மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 49 அமைச்சரவை அமைச்சர்களையும் எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.