இந்திய வம்சாவளி மக்களின் 150 ஆண்டுகள் வாழ்வியல் பற்றிய நூல் இப்போதுதான் வெளிவந்துள்ளது.எனவே, இன்றைய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு 2030 ஆண்டில் மலையக மக்கள் எங்கே இருக்கப் போகின்றார்கள் என்பது பற்றிய சிந்தனையையும், கருத்துக்களையும் இப்போதிருந்தே பத்திரிகை ஊடாக வெளிப்படுத்த முன்வர வேண்டும் என எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் (வீரகேசரி) பிரதம செயற்பாட்டு அதிகாரி எம். செந்தில்நாதன் வேண்டுகோள் விடுத்தார்.

கலாநிதி ஏ.எஸ். சந்திரபோஸ், கலாநிதி இரா. ரமேஷ் ஆகியோரின் “இலங்கையில் தேயிலை பெருந்தோட்டச் சமூகம் – 150 வருடங்கள்” நூலின் அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் வரவேற்புரை நிகழ்த்த, கொட்டகலை அரசினர் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ஜே. சற்குருநாதன், விரிவுரையாளர் எம். அகிலன் ஆகியோர் விமர்சன உரை நிகழ்த்தினார்கள். இதில் கலந்துகொண்டு அறிமுகவுரை நிகழ்த்தும் போதே செந்தில்நாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்த நாட்டில் 200 ஆண்டு கால வரலாறு உண்டு. எனினும், இந்த மக்கள் பற்றிய பதிவுகள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. “இலங்கையில் தேயிலை பெருந்தோட்டச் சமூகம்” பற்றிய நூல் காத்திரமான படைப்புகளைக் கொண்டுள்ள வரலாற்று ஆவணமாகவும் உள்ளது. இதை பிரசுரித்து உதவிய “வீரகேசரி” நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் குமார் நடேசன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.வீரகேசரி நிறுவனம் 1970 களில் பல எழுத்தாளர்களின் படைப்புக்களை வெளியிட்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் ஊக்குவிக்க்ப்பட்டும் வந்தார்கள். எனினும், காலப் போக்கில் இவ்வாறு படைப்புகளை வெளியிடும் பணி இடைநிறுத்தப்பட்டு விட்டது. அதனால் பல அரிய நூல்கள் வெளிவரத் தவறியுள்ளன.

இருந்தும், 2001 ஆம் ஆண்டு முதல் எமது நிர்வாகப் பணிப்பாளர் பல புத்தகங்களை அச்சிடுவதற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.

 ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயம், திருக்கோணேஸ்வரம், நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முதலான 16 புத்தகங்கள் இதுவரை அச்சிடப்பட்டுள்ளன. அந்த வகையில் மலையகம் தொடர்பான இந்த நூலும் வெளிவந்துள்ளது.

மலையக இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கல்வியில் மறுமலர்ச்சி கண்டு வருகின்றது.

 நுவரெலியா மாவட்டத்தில் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி, புனித பொஸ்கோ கல்லூரி, கொட்டைகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி, தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முதலானவை பாரிய பங்களிப்பை செலுத்தி வருகின்றன. 

பல்வேறு துறைகளில் நாம் தடம் பதித்து வருகின்றோம். இது எமது முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தாலும், இன்று வரை எமது மக்களின் சம்பள உயர்வு போன்ற பல பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. 

எனவே, நாம் எதிர்காலத்தில் நாம் எத்தகைய வளர்ச்சியைக் காண வேண்டும், அதற்கான வழிவகைகள் எவை என்பதற்கான ஓர் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எனவே, 2030 ஆம் ஆண்டில் நாம் எங்கே இருக்கப் போகின்றோம், இன்னும் 50 ஆண்டுகளில் நாம் சாதிக்கப் போவது எவை என்பது பற்றிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் வீரகேசரி வார வெளியீட்டின் ஊடாக கொண்டு வருமாறு வார இதழின் உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரனை கேட்டுக் கொள்கிறேன். 

இத்தகைய கருத்துப் பரிமாற்றத்துக்கு வாரந்தோறும் அரைப் பக்கத்தை அவர் ஒதுக்கித் தர வேண்டும். எமது இலக்கு பற்றிய சாதக, பாதகமான கருத்துக்களை ஒவ்வொருவரும் முன்வைக்கலாம்.

அது எதிர்காலத்தில் ஒரு தொகுப்பாக வெளிவருவதற்கு உந்து சக்தியாகவும் இருக்கும். அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்க நாம் தயாராக இருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.