டிசம்பர் முதலாம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் உலக எயிட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

எயிட்ஸ் என்ற உயிர் கொல்லி நோயால் இதுவரை உலகத்தில் முப்பத்தைந்து மில்லியன் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் முப்பத்தியேழு மில்லியன் மக்கள் எயிட்ஸ் என்னும் கொடிய நோயின் பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் புதிதாக பதினேழு லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தற்போது எயிட்ஸால் பாதிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பத்து மில்லியன் மக்கள் பாதிப்பின் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ளவேயில்லை. இதனால் இந்த ஆண்டு உலக சுகாதார நிறுவனம், எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு வாசகமாக உங்களின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (Know Your Status) என்பதை முன்னிறுத்தியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாலியல் ஒழுக்க கலாச்சாரத்தைப் பின்பற்றாதது, பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்வது,எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தை, பரிசோதனை செய்யப்படாத குருதி, சுத்திக்கரிக்கப்படாத ஊசி போன்ற வைத்திய  உபகரணங்கள் போன்றவற்றின் மூலம் எயிட்ஸ் நோய் பரவுகிறது.

இது உடலில் புகுந்தவுடன் உடலிலுள்ள நோயெதிர்ப்பு செல்களை தாக்கி அழித்து, மரணத்தை உண்டாக்குகிறது. இதனை ஆரம்ப  நிலையில் கண்டறிந்து, தொடர் கண்காணிப்பு மற்றும் கூட்டு சிகிச்சையும், Anti Retroviral Therapy என்ற சிகிச்சையையும் அளித்து வந்தால் அவர்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கும். இது முழுமையாக குணப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் எயிட்ஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை அருகிலுள்ள வைத்திய நிபுணர்களிடம் அழைத்துச் சென்று அவர்கள் தற்போது நோயில் எந்த நிலையில் இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்கு உதவிடவேண்டும் என்று வைத்திய துறையினர் கேட்டுக் கொள்கிறார்கள்.