பிறந்த சிசுவொன்று புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, ஓமந்தை, விளாத்திகுளம் பகுதியில் இன்று அதிகாலை தாயொருவர்  சிசு ஒன்றை பிரசவித்து பின்னர் அச் சிசுவை வீட்டின் பின்புறத்திலேயே புதைத்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் புதைக்கபட்டிருந்த சிசுவை மீட்டு பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தை உயிரிழந்த நிலையில் பிரசவித்தமையால் தாயார் வீட்டின் பின்புறத்தில் சிசுவை புதைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தையடுத்து குழந்தையின் தந்தையை கைதுசெய்துள்ள பொலிஸார் தாயை வவுனியா வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.