சம்பூர் அனல்மின் நிலையம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமென மக்கள்  கருதினால் அதை நிர்மாணிப்பது பற்றி மீள்பரிசீலனை செய்வோம் எனவும் இது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கக் காத்திருக்கிறேன் என எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

கடற்படை வசமிருந்த உயர்பாதுகாப்பு  வலயமாக  இருந்த 177 ஏக்கர் சம்பூர் மக்களுக்கான காணிகள் கையளிக்கும் வைபவம்  சம்பூரில் அரசாங்க அதிபர்  என் புஸ்பகுமார தலைமையில்  நடைபெற்றவேளை  அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து  உரையாற்றுகையில்,  

சம்பூர் அனல்மின் நிலையம் சம்பந்தமாக  பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. கண்டனங்களும்  விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன. தினந்தோறும்  தொலைபேசி மூலம்  சம்பூர் அனல்மின்  நிலையம் சம்பந்தமாக  நிறுவவேண்டாமென மக்கள் எனக்கு கூறிவருகிறார்கள். 

அனர்த்தங்கள் ஏற்படுமெனக் கருதப்பட்டால் அது நிறுவுவது தொடர்பில் நான்  மீள் பரிசீலனைச் செய்யத் தயாராக இருக்கின்றேன்.  மக்கள்  ஏற்றுக்கொள்ளாத  எந்தவொரு   விடயத்தையும் நாம்  செய்யப் போவதில்லையென உறுதிகூற  விரும்புகின்றேன்.