(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு மீண்டும் அவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். 

ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் சிலர் சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். 

இவ்வாறான மாற்றுக்கருத்துக்களுக்கு இணங்க எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் விடயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். 

பாராளுமன்ற அமர்வுகள் இன்று வெள்ளிக்கிழமை  ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களால் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. 

எனினும் எந்தவித உரிய காரணங்களுமன்றி தற்போது பிரதமர் பதவிலிருந்து ரணில் விக்ரமசிங்கவே நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புக்கு முரணாக பதவி நீக்கப்பட்ட அவரே மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். 

எனினும் எதிர்வரும் தேர்தலில் இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றார்.